13 Years of Vamsam:எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர்..' 13 ஆண்டுகளை நிறைவு செய்த வம்சம்..!
நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ‘வம்சம்’ படம் வெளியாகி இன்றோடு 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ‘வம்சம்’ படம் வெளியாகி இன்றோடு 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இது பாண்டிராஜ் படம்
பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் பாண்டிராஜ். இவரின் 2வது படமாக வெளியானது ‘வம்சம்’. இந்த படத்தின் மூலம் நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். நடிகை சுனைனா ஹீரோயினாக நடித்தார். மேலும் ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு, அனுபமா குமார், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தாஜ்நூர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
மறைந்த ரவுடி ரத்னத்தின் வாரிசு என்பதால் அருள்நிதிக்கு யாருமே பெண் தர மறுக்கிறார்கள். அவருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த சுனைனாவை பார்த்ததும் காதல் ஏற்படுகிறது. ஆனால் சுனைனாவின் அப்பாவை ஊர் பெரியவர் ஜெயப்பிரகாஷ் கொலை செய்கிறார். இதனால் ஆத்திரப்படும் அவர், ஜெயப்பிரகாஷ் மீது முச்சந்தியில் வைத்து சாணியை ஊற்றி அவமானப்படுத்துகிறார். அருள்நிதி, சுனைனா காதலுக்கு ஜெயப்பிரகாஷ் எதிரியாக மாற கடைசியில் என்ன நிகழ்ந்தது?, அருள்நிதி அப்பா எப்படி இறந்தார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை சொல்லியது ‘வம்சம்’.
எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர்
இந்த படம் சாதியை அடிப்படையாக கொண்டு கதை அமைக்கப்பட்டிருந்தது. இதில் எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர் வம்சத்தை சேர்ந்தவராக அருள்நிதி நடித்திருந்தார். தமிழ் சினிமாவின் முக்கியமானவர், மறைந்த முதல்வர் கருணாநிதியின் பேரனான அருள்நிதி, அவரது பெயரை காப்பாற்றும் வகையில் முதல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் சுனைனாவுக்கும் இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றுக் கொடுத்தது.
படத்தில் இடம் பெற்ற மன்னாரு மன்னாரு, என் நெஞ்சே, மருதாணி பூவபோல பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
ரசிகர்களை கவர்ந்த காட்சிகள்
வம்சம் படம் ரசிகர்களை கவர மிகப்பெரிய காரணமாக படத்தில் இடம் பெற்ற காட்சிகள் அமைந்தது. செல்போன் சிக்னலுக்காக மரத்தில் ஏறுவது, மாட்டுக்கு அசின் என பெயர் வைப்பது, பூனைக்கு த்ரிஷா, கோயில் திருவிழாவில் ஒவ்வொரு சாதிக்காரர்களின் மண்டகப்படி, தற்பெருமை பேசும் காட்சிகள் என ஆங்காங்கே ரசிகர்களை ரசிக்க வைத்திருந்தார் பாண்டிராஜ்.
உண்மையில் இந்த படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நடிகர் உதயநிதி. ஆனால் மாடு மேய்க்க வேண்டும் உள்ளிட்ட பல காரணங்களால் அருள்நிதியை கோர்த்து விட்டதாக சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மழையால் இசை கச்சேரி ரத்து.. சோகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்.. முதலமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்..!