Ajith - Shankar Combo: என்னது.. இதெல்லாம் ஷங்கர் இயக்கத்தில் நம்ம அஜித் நடிக்க வேண்டிய படமா..?
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் அஜித் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றிப்படங்களில் நடிக்க வேண்டியதை தவிர்த்ததாக தகவல்கள் வெளியாகியது.
![Ajith - Shankar Combo: என்னது.. இதெல்லாம் ஷங்கர் இயக்கத்தில் நம்ம அஜித் நடிக்க வேண்டிய படமா..? actor ajith missed movies shankar direction jeans muthalvan Ajith - Shankar Combo: என்னது.. இதெல்லாம் ஷங்கர் இயக்கத்தில் நம்ம அஜித் நடிக்க வேண்டிய படமா..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/14/d19694a6c186b55e01651893aecc566c1678803425193333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மூத்த பத்திரிகையாளரும், திரைப்பட விமர்சகருமானவர் செய்யாறு பாலு. அவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்று திரைப்பட விமர்சகர்களுக்கு அஜித் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நான்கு படங்களில் அஜித் நடிக்க மறுப்பு தெரிவித்தார் என்று கூறியுள்ளார். பாகுபலி, ஆர்ஆர்ஆர் என்ற பிரம்மாண்ட படங்கள் மூலமாக ராஜமெளலி பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் வாங்கும் முன்னரே, இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் பெற்றவர் ஷங்கர்.
ஜீன்ஸ்:
பிரம்மாண்ட படங்களை இயக்கி வெற்றி பெற்ற ஷங்கர் இயக்கி இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஜீன்ஸ். பிரசாந்த் – ஐஸ்வர்யாராய் நடித்த இந்த படம் 1998ம் ஆண்டு வெளியானது. அப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய பிரம்மாண்டமாக கருதப்பட்ட படம் ஜீன்ஸ். இந்த படத்தில் முதலில் நாயகனாக நடிக்க நடிகர் அஜித்தையே இயக்குனர் ஷங்கர் அணுகியதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கி 3 நாட்கள் நடந்ததாகவும், சில காரணங்களால் படத்தில் இருந்து அஜித் விலகியதாகவும் கூறப்படுகிறது.
முதல்வன்:
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் படமான முதல்வன் படம் 1999ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நடிகர் அர்ஜூன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் ரஜினிகாந்தையும், அதன்பின்பு நடிகர் விஜய்யையும் ஷங்கர் அணுகியது அனைவரும் அறிந்ததே. ஆனால், இவர்களுக்கு முன்பு நடிகர் அஜித்தைதான் இயக்குனர் ஷங்கர் அணுகியுள்ளார். ஆனால், இந்த படத்திலும் நடிகர் அஜித்- ஷங்கர் கூட்டணி இணைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சிவாஜி:
இதையடுத்து, நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் சிவாஜி. சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் சிவாஜி. 2007ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் முதலில் நடிக்க இயக்குனர் ஷங்கர் நடிகர் அஜித்தையே அணுகியதாக செய்யாறு பாலு கூறியுள்ளார். ஆனால், இந்த படத்திலும் பல்வேறு காரணங்களால் அஜித்தால் நடிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நடிகர் அஜித்திற்கு பதிலாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குனர் ஷங்கர் அணுகியுள்ளார்.
எந்திரன்:
ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி என பிரம்மாண்ட வெற்றிப்படங்களில் சேர முடியாத கூட்டணியை நடிகர் அஜித்துடன் மீண்டும் சேர ஷங்கர் திட்டமிட்டார். இதற்காக, நான்காவது முறையாக அவர் அஜித்தை அணுகியது அவரது பிரம்மாண்ட திரைப்படமான எந்திரனுக்காக. நடிகர் ஷாரூக்கான், நடிகர் அர்ஜூன், நடிகர் கமல் என பலரிடம் போய்விட்டு கடைசியாக ரஜினிகாந்திடம் வந்து சேர்ந்த படம் எந்திரன். இந்த படத்திலும் ஷங்கர் அஜித்தை அணுகியதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.
ஆனால், மேலே கூறிய நான்கு வெற்றி படங்களிலும் பல்வேறு காரணங்களால் அஜித் – ஷங்கர் கூட்டணி இணைய முடியாமல் போய் உள்ளது. செய்யாறு பாலு அளித்த இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால், இந்த நான்கு படங்களுமே மிகப்பெரிய வெற்றி படங்கள் ஆகும். மேலும், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட பட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நாயகனாக நடிக்க முதலில் அஜித்தை அந்தந்த படங்களின் இயக்குனர்கள் அணுகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)