(Source: ECI/ABP News/ABP Majha)
11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?
இது 11 ஆண்டுகளுக்குப் பின் நடந்த ரசிகர்கள் சந்திப்பு. அடுத்த சந்திப்பு எப்போது நடக்கும் என்பதும் தெரியாது. அதை அறிந்தவர் அஜித் மட்டுமே.
தமிழ்நாட்டில் தனக்கென தனி ரசிகர் கூட்டம், தனக்கென ஒரு பார்முலா என தனித்து இயங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித். ஒரு நடிகர் எந்த முயற்சியை எல்லாம் எடுக்கக் கூடாதோ, அதையெல்லாம் அடுத்தடுத்து எடுப்பவர். ரசிகர்கள் தான், ஒரு ஹீரோவுக்கு பலம் என்பார்கள். அந்த ரசிகர் மன்றத்தையே வேண்டாம் என கலைத்தவர் அஜித்,
2011 மே 1 ம் தேதி அஜித் பிறந்தநாளை கோலகலமாக கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகிக் கொண்டிருந்த போது, ஏப்ரல் 29 ம் தேதி அஜித் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
தனது 40 வது பிறந்தநாளில் அஜித் எடுத்த இந்த முடிவு, அவரது ரசிகர்களை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த சினிமா உலகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. ‛எப்படி இப்படி ஒரு முடிவை அஜித் எடுத்தார்?’ என்று அனைவரும் முனுமுனுத்தனர். ஆனால், அஜித் ஒரு முடிவை எளிதில் எடுப்பவர் அல்ல; எடுத்த முடிவில் இருந்து பின் வாங்குபவரும் அல்ல. இன்று வரை ரசிகர் மன்றங்கள் இல்லாத ஒரே மாஸ் ஹீரோ, அவர் மட்டுமே.
மங்காத்தா சூட்டிங் தந்த அனுபவம்!
அஜித்தின் இந்த அறிவிப்பு வெளியான நேரத்தில் தான், மங்காத்தா படத்தின் படபிடிப்பு உச்சத்தில் இருந்தது. முழுக்க மும்பையில் தான், ஷூட்டிங் நடந்தது. 2011 ஏப்ரல் 29 ம் தேதி அஜித் இந்த முடிவை எடுப்பதற்கு, 2011 ஏப்ரல் 18 ம் தேதி நடந்த ஒரு சம்பவம் தான் காரணம்.
மும்பையில் மங்காத்தா சூட்டிங் சூடாக நடந்து கொண்டிருந்த போது, அஜித் அங்கு இருப்பதை கண்டு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இதனால் சூட்டிங் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த பகுதியும் பரபரப்பானது. இதை அஜித் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு முன்பு , அஜித் எப்போது ரசிகர்களை சந்தித்தார் என்கிற கேள்விக்கு, பதிலும் இல்லை. வேறு வழியே இல்லை.... ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.
அப்போது, ரசிகர்களை சந்தித்த அஜித், அவர்களுக்கு கை அசைத்து மகிழ்வித்து அவர்களை அங்கிருந்து அனுப்ப முயற்சித்தார். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகே அது நடந்தது. அங்கு வந்த அனைவருமே இளைஞர்கள். அவர்களின் ஒரு நாள் பணியை துறந்து, தன்னைப் பார்க்க கூடியதை அஜித் விரும்பவில்லை.
அதில் வேலைக்குச் செல்பவர், கல்லூரிக்குச் செல்பவர், பள்ளிக்குச் செல்பவர் என ஏராளமானோர் இருந்தனர். அதையெல்லாம் புறக்கணிக்கும் அளவிற்கு தன் மீது இவ்வளவு பற்று ஏற்படுகிறதா என்பதை ஒரு கணம் சிந்தித்தார் அஜித். அதன் எதிரொலி தான், ரசிகர் மன்றங்களை கலைக்கும் முடிவு.
அடுத்த 11 நாளில் , தனது ரசிகர் மன்றங்களை கலைத்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் அஜித். அரசியல், அமைப்பு என எதிலும் தனது ரசிகர்கள் சிக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதனால், ரசிகர்களை தூரத்தில் நின்று ரசிக்க ஆரம்பித்தார். வழக்கமாக பிறந்தநாளில் ரசிகர்களை சந்திப்பதை நடிகர்கள் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அதை கூட தவிர்த்தார்.
திருவிழாவான திருச்சி!
இப்படி தான், 2011ல் இருந்து அஜித் தனக்குள் ஒரு வட்டத்தை போட்டு அமர்ந்து கொண்டார். 2022ல் திருச்சி துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு வந்த அஜித், அது தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல், சத்தமில்லாமல் தான் வந்தார். ஆனால், துப்பாக்கி தோட்டாக்களை விட வேகமாக பரவிய அந்த தகவல், அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிய காரணமானது.
யாரும் ஒருங்கிணைக்காமல் குவிந்த அந்த கூட்டத்தை ஏமாற்ற விரும்பாத அஜித், கட்டடத்தின் மீது ஏறி, கைகளை அசைத்து, முத்தம் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். இரவு வரை விடாமல் காத்திருந்த ரசிகர்களை, அவரும் ஏமாற்றாம்ல், வெளியே வந்து உற்சாகப்படுத்தி, பலத்த பாதுகாப்புக்கு இடையே அங்கிருந்து புறப்பட்டார். இது 11 ஆண்டுகளுக்குப் பின் நடந்த ரசிகர்கள் சந்திப்பு. அடுத்த சந்திப்பு எப்போது நடக்கும் என்பதும் தெரியாது. அதை அறிந்தவர் அஜித் மட்டுமே. வெளியே செல்லும் போது, அங்கிங்குமாய் ஒருவர் இருவரை சந்திப்பது என்பது வேறு; ஒருவருக்காக ஒரு கூட்டமே கூடி, அவர்களை சந்திப்பது என்பது வேறு. மங்காத்தா படப்பிடிப்பிற்கு பின், திருச்சியில் நடந்தது அது தான்!