Kiran Rao: முதல் குழந்தை பிறப்பதற்கு முன் பலமுறை கருச்சிதைவு.. நடிகர் அமீர் கான் முன்னாள் மனைவி உருக்கம்!
தனது முதல் குழந்தை பிறப்பதற்கு முன் பலமுறை தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக நடிகர் அமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் தெரிவித்துள்ளார்.
அமீர் கான் - கிரண் ராவ்
பாலிவுட் நடிகர் அமீர் கானின் முன்னாள் மனைவி இயக்கியுள்ள ’லாபதா லேடீஸ்’ கடந்த மாதம் திரையரங்கில் வெளியானது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கிரண் ராவ் இயக்கியுள்ள இந்தப் படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று 50ஆவது நாளாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு நேர்க்காணல் ஒன்றில் கலந்துகொண்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் கிரண் ராவ். அப்போது தனது தனிப்பட வாழ்க்கை குறித்தும் பல்வேறு உண்மைகளை பகிர்ந்துகொண்டார்.
‘LAAPATAA LADIES’ CONTINUES TO WIN HEARTS… 50 DAYS IN CINEMAS… The #KiranRao directorial #LaapataaLadies - a comedy-drama - has successfully completed 50 days in *cinemas*.
— taran adarsh (@taran_adarsh) April 19, 2024
The much-loved film is now running at key centres in its 8th week.#LaapataaLadies stars #NitanshiGoel,… pic.twitter.com/35IWleqa4x
அமீர் கானுடன் திருமணம்
நடிகர் அமீர் கான் கடந்த 2002ஆம் ஆண்டு தனது முதல் மனைவி ரீனா தத்தாவுடன் விவாகரத்துப் பெற்றுக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஜூனைத் கான் என்கிற மகனும், இரா கான் என்கிற மகளும் உள்ளார்கள். இரா கான் திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. முதல் மனைவியுடன் விவாகரத்துப் பெற்ற அமீர் கான், 2005ஆம் ஆண்டு கிரண் ராவை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு 2011ஆம் ஆண்டு செயற்கை கருத்தரிப்பு முறையில் இந்தத் தம்பதிக்கு அஸாத் கான் என்கிற மகன் பிறந்தார். தனது முதல் குழந்தையை பெற்றெடுக்கும் முன் தான் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி கிரண் ராவ் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்
பல முறை கருச்சிதைவு
” என்னுடைய முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் முன் எனக்கு நிறைய முறை கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. அப்போது என்னுடைய உடல் நிலை மோசமாக இருந்த காரணத்தினால் என்னால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை. என்னுடைய மகன் ஆஸாத் பிறந்தபோது எனக்கு இந்த உலகத்தில் அவனைத் தவிர வேறு எதுவும் முக்கியமாக இல்லை. என் மகன் பிறந்த அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நான் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தேன். இந்த 10 ஆண்டுகள் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டுகள். சினிமாவை விட்டு விலகி இருந்ததற்கு ஒரு நொடி கூட நான் வருத்தப்பட்டதில்லை” என்று கிரண் ராவ் கூறியுள்ளார்.
அமீர் கான் மற்றும் கிரண் ராவ் கடந்த 2021ஆம் ஆண்டு திருமண உறவை முடித்துக் கொண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.