‛எம்ஜிஆர்., கூட நடிச்சவன்... அதுக்கு அப்புறம் இப்போ தான் வாய்ப்பு கிடைக்குது’ - ராகுல் தாத்தா அட்ராசிட்டி பேட்டி!
ராகுல் தாத்தா சினிமா வாய்ப்பு வேண்டி பல இயக்குநர்களுக்கு விருந்தோம்பல் செய்திருக்கிறாராம் . ஆனால் ஒரு சீன் , இரண்டு சீனில் மட்டுமே வாய்ப்பு கொடுப்பார்களாம் .
நயன்தாரா , விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரௌடிதான் திரைப்படம் பலருக்கும் பிடித்தமான படங்களுள் ஒன்று. அந்த படத்தை நயனுக்காகவோ , விஜய் சேதுபதிக்காவோ பார்த்தவர்கள் ஒருபக்கம் இருந்தால் , ராகுல் தாத்தாவிற்காக மீண்டும் மீண்டும் பார்த்த ரசிகர்களும் உண்டு. பார்க்கத்தான் தளர்ந்த தேகம் , நரைத்த முடியுடன் காணப்படுவார் . ஆனால் எனர்ஜியோ இக்கால இளைஞர்களுக்கே டஃப் கொடுக்கும் . எம்.ஜி.ஆரின் சமையல்காரராக பல வருடங்கள் அவருடனே இருந்து, ஒரு சில படங்களில் கேமியோ ரோலில் நடித்த உதயபானுதான் அவர். 55 வருடங்களாக சினிமா துறையுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் உதயபானு... இல்லை...இல்லை, நம்ம ராகுல் தாத்தா , 15 எம்.ஜி.ஆர் படங்களில் நடித்துள்ளாராம். பல வருடங்களாக சினிமாவில் நடிக்க போராடியவர் , இறுதியில் சினிமாவிற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் மீண்டும் சொந்த ஊருக்கே போய்விடலாம் என திட்டமிட்டிருக்கிறார். அப்போதுதான் தனுஷின் அலுவகத்தில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.
View this post on Instagram
மாரி படத்தில் புறா வளர்க்கும் முதியவர் கதாபாத்திரம் இருக்கிறது வாருங்கள் என அழைத்தார்களாம், அதற்காக ஃபோட்டோ ஷூட் எடுத்தார்களாம். அதன் மூலம் நானும் ரௌடிதான் படத்திற்கான வாய்ப்பு கிடைத்ததாம். சமையல் கலைஞராக இருந்த ராகுல் தாத்தா சினிமா வாய்ப்பு வேண்டி பல இயக்குநர்களுக்கு விருந்தோம்பல் செய்திருக்கிறாராம் . ஆனால் ஒரு சீன் , இரண்டு சீனில் மட்டுமே வாய்ப்பு கொடுப்பார்களாம் ஆனால் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நான் ஒரு வேளை சாப்பாடு கூட போட்டதில்லை, அவர் எனக்கு படம் முழுக்க நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என வெகுளியாக கூறுகிறார் ராகுல் தாத்தா. மேலும் நானும் ரௌடிதான் திரைப்படத்திற்காக 45 நாட்கள் கால் ஷீட் கேட்டாராம் விக்னேஷ் சிவன். மேலும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ இல்லை.. ராகுல் கதாபாத்திரம் இறங்கி அடிக்கும் என்றாராம்.. ஒவ்வொரு முறையும் ஷூட்டிங் முடியும் பொழுது அழைத்து , ராகுல்... திரையரங்கை தெறிக்க விட்றோம் என்பாராம் விக்கி ..உடனே ராகுல் தாத்தாவிற்கு சொல்லவா வேண்டும், ‛ சிதற விட்றேன் பாரு’ என்றாராம்...சொன்ன வாக்கை ராகுல் தாத்தா காப்பாற்றி விட்டார்தானே ! இந்த வயதிலும் சினிமா மீது அதீத காதலுடனும் ஈடுபாட்டுடனும் இருக்கும் நடிகர்தான் ராகுல் தாத்தா என்னும் உதயபானு.