AR Rahman: ‘அதிக கூட்டத்தால் குழப்பம்’ .. ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடிகளுக்கு மன்னிப்பு கேட்ட ACTC நிறுவனம்..!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ACTC Events நிறுவனம் ரசிகர்களிடத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ACTC Events நிறுவனம் ரசிகர்களிடத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது.
கோளாறான ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி
சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய தினம் பெய்த கனமழையால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தண்ணீர் பெருமளவு தேங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் ஒதுங்க கூட இடம் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனால் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான், நிகழ்ச்சி வேறொரு நாளில் நடக்கும் என அறிவித்தார்.
அந்த வகையில் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் மறக்குமா இசை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக கடந்த முறை மழையில் சிக்கிய ரசிகர்களுக்கு இம்முறை மழை பெய்தால் தற்காத்துக்கொள்ள ரெயின்கோட் வழங்கப்பட்டது. இதனால் பெரும் ஆர்வமுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கு காரணம் அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள்தான்.
கொந்தளித்த ரசிகர்கள்
ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சி நடைபெறும் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் ஓ.எம்.ஆர். சாலையை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே மதியம் 2 மணியளவில் இருந்தே ரசிகர்கள் கார்களிலும், பைக்குகளிலும் வர தொடங்கியதால் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சாலையின் இருபுறம் நின்று சரிசெய்தாலும் பல மணி நேரமாக வாகன நெரிசல் ஏற்பட்டது.
Grateful to Chennai and the legendary @arrahman Sir! The incredible response, the overwhelming crowd made our show a massive success. Those who couldn't attend on overcrowding, Our sincere apologies. We take full responsibility and accountable. We are with you. #MarakkumaNenjam
— ACTC Events (@actcevents) September 11, 2023
மேலும் மதியம் 3 மணி முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் 4 மணியாகியும் கேட் திறக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ப்ளாட்டினம், டைமண்ட், கோல்ட், சில்வர் என்ற அடிப்படையில் ஆயிரக்கணக்கான ரூபாயில் டிக்கெட் விற்கப்பட்ட நிலையில், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டது, முறைப்படி பார்க்கிங் வழங்காதது என வெளியிலேயே பிரச்சினை ஏற்பட தொடங்கியது.
தொடர்ந்து உள்ளே சென்றால் குறிப்பிட்ட டிக்கெட் வாங்கிய இடத்துக்கு செல்ல முடியாத அளவுக்கு ரசிகர்கள் முண்டியடித்தனர். உண்மையில் அனைவருமே டிக்கெட் பெற்றவர்கள் தானா? என்ற கேள்வியும் எழுந்தது. கைக்குழந்தைகள், சிறுவர் - சிறுமியர்கள், பெண்கள், வயதானவர்கள் என பலரும் இந்த நெரிசலில் சிக்கிக் கொண்டனர். குழந்தைகள் மூச்சுவிட கூட முடியாமல் அழுத வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மன்னிப்பு கேட்ட ACTC events நிறுவனம்
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு ACTC events நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. திட்டமிட்டதை விட அதிக ரசிகர்கள் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும், அனைத்து விதமான சிரமங்களுக்கும் முழு பொறுப்பு ஏற்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது, தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதுதொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் எவ்வித கருத்தும் தெரிவிக்காததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.