HBD Urvashi : ஜெயிச்சிட்ட மாறா டயலாக்... சூர்யாவுக்கு மட்டுமல்ல, ஊர்வசிக்கும்தான்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஊர்வசி..
அப்பாவிதனமாக முகத்தை வைத்து கொண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வாய் விட்டு சிரிக்க வைத்த நடிகை ஊர்வசியின் பிறந்தநாள் இன்று.
தமிழ் சினிமாவிற்கு பொக்கிஷமாக வந்த ஒரு கேரளத்து பைங்கிளி கவிதா ரஞ்சனி. என்னடா இது புது பெயரா இருக்கே என உங்கள் முகங்களில் தெரியும் கேள்விக்கு பதில் இதோ. 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் பரிமளம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் நமக்கு அறிமுகமான நடிகை ஊர்வசியின் உண்மையான பெயர் தான் கவிதா ரஞ்சினி.
நம்பர் 1 நடிகை:
தனது 8 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் ஒரு ஹீரோயினாக தனது 13 வயதில் தமிழ் சினிமா மூலம் திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை ஊர்வசி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 700 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஒரு திறமையான நடிகை. மலையாளம் மற்றும் தமிழில் தான் பெரும்பாலான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 80 'ஸ், 90 'ஸ் காலகட்டங்களில் ஒரு முன்னணி நடிகையாக நம்பர் 1 இடத்தில் கொடி கட்டி பறந்தவர்.
சிறந்த சப்போர்டிங் நடிகை:
நடிகை கலா ரஞ்சனி, நடிகை கல்பனா என தனது இரு சகோதரிகளும் சினிமாவில் ஏற்கனவே கால் பதித்தவர்கள் என்றாலும் நடிகை ஊர்வசிக்கு கிடைத்த பிரபலமும், வரவேற்பும் அந்த அளவிற்கு அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு நடிகை என்பதை காட்டிலும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட், எழுத்தாளர், ஸ்கிரிப்ட் ரைட்டர், தொலைக்காட்சி நடிகை மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒரு வித்தகியாக வலம் வருபவர். சமீப காலமாக அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஊர்வசி மலையாள படத்திற்காக சிறந்த சப்போர்டிங் நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர். அது மட்டுமின்றி ஏராளமான தமிழ்நாடு மாநில விருது மற்றும் கேரளா மாநில விருதுகள் மற்றும் ஏராளமான விருதுகளை குவித்த இவர் வாங்காத விருதுகளே இல்லை.
Wishing a delightful birthday to the legendary actress #Urvashi ma'am, who can light up any screen with her talent and versatility💥#HappyBirthdayUrvashi #HBDUrvashi pic.twitter.com/I7VxxJV88J
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) January 25, 2023
ஊர்வசியின் அபாரமான நடிப்பிற்கு உதாரணம் மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் போன்ற படங்களை சொல்லலாம். அதிலும் சமீபத்தில் வெளியான தேசிய விருது பெற்ற 'சூரரைப் போற்று' திரைப்படம். அப்படத்தில் அவரின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்திற்காக சிறந்த சப்போர்டிங் நடிகைக்கான பிலிம் பேர் விருதையும் பெற்றார்.
சார்லி சாப்ளினின் பெண் உருவம் :
நடிகை ஊர்வசியின் குழந்தை தனமான நடிப்பு, காமெடி டைலாக் டெலிவரி, அப்பாவி ரீயாக்ஷன் தான் இவரின் சிறப்பம்சங்கள். அப்பாவிதனமாக முகத்தை வைத்து கொண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வாய் விட்டு சிரிக்க வைத்த நடிகை ஊர்வசிக்கு உலகநாயகன் கமல்ஹாசன் 'நடிப்பு ராட்சசி' என பட்டம் கொடுத்துள்ளார். உலகளவில் நகைச்சுவைக்கு பெயர் பெற்ற சார்லி சாப்ளினின் பெண் உருவம் தான் ஊர்வசி என்றும் கொண்டாடப்பட்டவர். நடிகைகளுக்கு காமெடி வராது என்ற கருத்தை மாற்றி காட்டி ஜெயித்தவர் நடிகை ஊர்வசி. இப்படி நடிப்பு சிகாமணியாக விளங்கிய ஊர்வசிக்கு டீச்சராக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஏமாற்றிய பாக்யராஜ்:
'சின்ன வீடு' திரைப்படத்தில் நடிகை பாக்யராஜ் ஜோடியாக நடித்தவர் ஊர்வசியின் அக்கா நடிகை கல்பனா. முந்தானை முடிச்சு திரைப்படத்தின் சமயத்தில் நடிகை கல்பனா மிகவும் பிஸியாக இருக்கவே அவரின் தங்கையான ஊர்வசியை சின்ன ரோல் என சொல்லி ஏமாத்தி 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார் பாக்யராஜ். பாக்யராஜ் - ஊர்வசி காம்போ செம்மையாக ஒர்க் அவுட் ஆனது.