Abirami Venkatachalam : கலாக்ஷேத்ரான்னு உச்சரிக்க தெரியாதவங்க கூட அவதூறா பேசுறாங்க... அபிராமியின் ஸ்டேட்மென்ட்டால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
கலாக்ஷேத்திரம் அல்லாதவர்கள், கலாக்ஷேத்ரா என்று உச்சரிக்ககூடத் தெரியாதவர்கள் இதைப் பற்றிப் பேசுவது வேதனை அளிக்கிறது என்ற அபிராமியின் இந்த ஸ்டேட்மென்ட் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது
சென்னையை அடுத்த திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கலை கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மீது ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பூகம்பமாக வெடித்து வருகிறது. இது தொடர்பாக கலாச்சார நிறுவனம் சில நாட்களாக கண்காணிப்பில் இருந்து வருகிறது.
ட்ரோல் செய்யப்படும் அபிராமி :
இந்த விவகாரம் குறித்து கலாஷேத்ராவுக்கு ஆதரவு அளித்து வருவதால் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார் பிக் பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாச்சலம். ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் அபிராமி வெங்கடாச்சலம். பெண் சுதந்திரம், பெண்கள் மீதான பார்வை பற்றி வெளியான இப்படம் சமூகத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்காக எடுக்கப்பட்ட நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் பெண்களுக்கு ஆதரவாக 'நோ மீன்ஸ் நோ' என நடித்து விட்டு இப்படி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஒரு கல்லூரிக்கு ஆதரவு தெரிவித்து வரும் அபிராமி வெங்கடாச்சலம் கருத்து விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமான நிறுவனம் :
இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் அபிராமி பேசுகையில் "நான் கலாக்ஷேத்ராவின் அலுமினி மற்றும் முன்னாள் மாணவி. எந்த ஒரு பிரச்சனை என்றாலும் இரண்டு தரிப்பின் நியாயங்களும் கேட்கப்பட வேண்டும் என்பதால் இது குறித்து நான் எனது கருத்தை சொல்ல விரும்பவில்லை. இந்த நிறுவனம் கடந்த 89 ஆண்டுகளாக இயங்கி வரும் நிறுவனம். அந்த நிறுவனத்தை குறை சொல்லும் வகையில் எதுவும் நடக்கவில்லை. கலாக்ஷேத்திரம் அல்லாதவர்கள் கூட இந்த நிறுவனத்தைப் பற்றி பேசுகிறார்கள். கலாக்ஷேத்ரா என்று உச்சரிக்ககூடத் தெரியாதவர்கள் இதைப் பற்றிப் பேசுவது வேதனை அளிக்கிறது. கலாக்ஷேத்ராவின் மாணவி என்ற முறையில், அந்த நிறுவனத்தை மக்கள் அவதூறாகப் பேசுவதை என்னால் பார்க்க முடிகிறது. இது குறித்த எந்த ஒரு தகவலும் முழுமையாக கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில் ஒரு பக்கத்தின் கதையை மட்டுமே கேட்டு எப்படி முடிவு செய்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை.
குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவு :
மேலும் தற்போதைய இயக்குனரான ரேவதி மேடத்திற்கு ஆதரவு அளிக்க விரும்புகிறேன். இந்த பாலியல் துன்புறுத்தக்கல்கள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவர் இயக்குநராகவே இல்லை. மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் பேசவோ அல்லது அவர் தரப்பு நியாயத்தை தெரிவிக்கவோ எந்த ஒரு வாய்ப்பும் வழங்கப்படவில்லை. அவருக்கும் மனைவி, குழந்தைகள் என ஒரு குடும்பம் உள்ளது. ஒரு துஷ்பிரயோகம் நடக்கும் போது அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்" என்றுள்ளார் அபிராமி.
கடுங்கோபத்தில் நெட்டிசன்கள் :
கலாக்ஷேத்திரம் அல்லாதவர்கள், கலாக்ஷேத்ரா என்று எழுதி படிக்க கூட தெரியாதவர்கள் கூட இந்த நிறுவனத்தை பற்றி அவதூறாக பேசுகிறார்கள் என்ற அபிராமியின் இந்த ஸ்டேட்மென்ட் நெட்டிசன்கள் மத்தியில் மேலும் கோபத்தை அதிகரித்துள்ளது. கலாக்ஷேத்ராவிற்கு ஆதரவாக அபிராமி பேசியிருந்தாலும், படத்தில் மட்டுமே பெண்களுக்கு நியாயம் வேண்டும் என பேசிவிட்டு ரியாலிட்டியில் இப்படி அநியாயத்திற்கு ஆதரவு அளிப்பது சரியல்ல. மேலும் 'கலாஷேத்ரான்னு உச்சரிக்கத் தெரியாதவங்க என அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.