“காதல் தோல்வி; தற்கொலை செய்ய நினைத்தேன்; குடும்பத்துக்காக இதை செய்தேன்” - அதிர்ச்சி அளித்த அப்பாஸ்
சினிமாவை விட்டு விலகியதால் மெக்கானிக் வேலை பார்த்ததாக கூறி நடிகர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் அழகால் தமிழ் திரையுலகில் கனவு நாயகனாக வலம் வந்த நடிகர் அப்பாஸ், சினிமாவில் இருந்து விலகி பைக் மெக்கானிக் வேலை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவை சேர்ந்த அப்பாஸ் மாடலிங் துறை மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1996ம் ஆண்டு வெளிவந்த 'காதல் தேசம்' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான அப்பாஸ் சாக்லேட் பாயாகவும், கனவு நாயகனாகவும் வலம் வந்தார். முதல் படத்திலேயே அதிகமான ரசிகர்களை, குறிப்பாக பெண் ரசிகைகளை அப்பாஸ் பெற்றிருந்தார். காதல் தேசத்தில் நடிக்கும் போது அப்பாஸ்க்கு தமிழ் தெரியாது என்பதால் அவருக்கு விக்ரம் தான் டப்பிங் கொடுத்து இருந்தார்.
தொடர்ந்து விஐபி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ஜாலி, ஆசை தம்பி, படையப்பா, ஹேராம், மின்னலே, ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், குரு என் ஆளு, நான் அவனில்லை படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனது முத்திரையை பதித்த அப்பாஸ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். 2015ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் இருந்து விலகிய அப்பாஸ் நியூசிலாந்து சென்றுள்ளார். அங்கு, அவர் மெக்கானிக் மற்றும் ஓட்டுநர் வேலை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அப்பாஸ், ”எனது பள்ளி பருவத்தில் 10வது பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். ஒரு கட்டத்தில் காதலியும் என்னை விட்டு போனதால் சாலையில் நின்று, வாகனத்தில் விழுந்து செத்துவிட வேண்டும் என நினைத்தேன். ஆனால், நான் அப்படி செய்தால் அந்த வாகன ஓட்டிக்கும் பாதிப்பு ஆகும் என்பது அதன் பின்னர் புரிந்தது. நன்றாக படித்தால் தான் சாதிக்க வேண்டும் என்பதை நான் ஏற்க மாட்டேன். அவரவர் திறமை அடிப்படையில் தான் முன்னேற முடியும்.
சினிமாவில் நான் நடித்த முதல் படம் வெற்றிப்பெற்றது. ஒருசில படங்கள் தோல்வியை தந்தன. பொருளாதார ரீதியில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தேன். வாடகை கொடுப்பதற்கும், சிகரெட் வாங்க கூட காசு இல்லாமல் தவித்து இருக்கிறேன். சினிமாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்விகளால் ஒருகட்டத்தில் நடிப்பின் மீது எனக்கு வெறுப்பை தந்தது. அதனால், குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு வந்துவிட்டேன். ஆரம்பத்தில் கடினமாக தான் இருந்தது. குடும்பத்துக்காக மெக்கானிக் வேலை பார்த்ததுடன், வாடகைக்கு டாக்சியும் ஓட்டி இருக்கிறேன். இப்போது என்னை மீண்டும் நடிக்க வரும்படி ஒருசில ரசிகர்கள் ஆன்லைன் மூலம் வலியுறுத்துகின்றனர். அதேநேரம், எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதாகவும், நான் இறந்து விட்டதாகவும் ஒருசிலர் கூறியுள்ளனர். இந்த தவறான வதந்திகள் நான் இந்தியா வந்தால் சரியாகி விடும்” என தனது வாழ்க்கையின் மறுப்பக்கத்தை அப்பாஸ் பகிர்ந்து கொண்டார்.