(Source: ECI/ABP News/ABP Majha)
`படையப்பா’ மாஸ் காட்சி.. இசையமைத்த மாற்றுத்திறனாளி ரசிகர்.. (வைரலாகும் வீடியோ)!
மாற்றுத் திறனாளி ஒருவர் படையப்பா பின்னணி இசையை இவ்வளவு நேர்த்தியாக ஒரு கையைப் பயன்படுத்தி இசைத்திருப்பதை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி, ஷேர் செய்து வருகின்றனர்.
’சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்!’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடிகர் ரஜினிகாந்துக்கு உலகம் முழுவதும் பல்வேறு வயதைச் சேர்ந்த ரசிகர்களும் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னுடைய சாம்ராஜ்யத்தைத் தனது கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் யாராலும் தொட முடியாத தன்னுடைய பிரத்யேக ஸ்டைலாலும் கட்டி, ரசிகர்களை ஈட்டியிருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
அவர் நடித்த தளபதி, முத்து, பாட்ஷா, படையப்பா எனத் தொடர்ந்து அனைத்து படங்களுமே மிகப்பெரிய ஹிட் அடித்தவை. ரஜினி நடித்த ‘படையப்பா’ திரைப்படம் இன்றும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான ‘படையப்பா’ படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, சிவாஜி கணேசன், மணிவண்ணன், நாசர் முதலானோர் நடித்திருந்தனர். 100 நாள்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி, வசூல் ஈட்டிய திரைப்படமாக ‘படையப்பா’ கருதப்படுகிறது.
‘படையப்பா’ படத்தின் பின்னணி இசையை அமைத்தவர் ஏ.ஆர்.ரகுமான். இந்தப் படத்தின் மாஸ் பிஜிஎம், வெளியாகி சுமார் 20 ஆண்டுகள் கழிந்த பிறகும் பலரையும் சிலிர்க்க வைக்கும் தன்மையுடையது. திரைக்கதையின் வேகத்திற்கும், ரஜினியின் ஸ்டைலுக்கும் இந்த பிஜிஎம் இசை பெரும் பக்க பலமாக இருந்தது. நீலாம்பரியாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணனின் வீட்டுக்குப் பல ஆண்டுகள் கழித்து செல்லும் படையப்பாவுக்கு நாற்காலிகள் போடப்படாமல் மரியாதை மறுக்கப்பட்டிருக்கும். அப்போது படையப்பா ஊஞ்சலை இழுத்து, அதன் மீது அமர்ந்து சல்யூட் அடிக்கும் காட்சி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் எப்போதும் நின்றிருக்கிறது.
இந்தக் காட்சியின் பின்னணியில் வரும் பிஜிஎம் இசையை, ஒரு கை இழந்த மாற்றுத் திறனாளி ஒருவர் இதே காட்சிக்குப் பின்னணி இசையாக தனது கீ போர்டைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கிறார். மாற்றுத் திறனாளி ஒருவர் படையப்பா பின்னணி இசையை இவ்வளவு நேர்த்தியாக ஒரு கையைப் பயன்படுத்தி இசைத்திருப்பதை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி, ஷேர் செய்து வருகின்றனர்.
Superstar @rajinikanth fan with physical hindrance playing Adrenaline Rushing #Padayappa bgm!#Annaatthe pic.twitter.com/51a2qe9M16
— JD (@mastervijay2020) August 26, 2021
கடந்த ஆண்டு ரஜினி ரசிகரான மாற்றுத் திறனாளி ஒருவர், ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தின் ‘மரண மாஸ்’ பாடலை இசையமைத்து, அது வைரலானது. அப்போது அதனை ‘பேட்ட’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பாராட்டி, ட்விட்டரில் பதிவு செய்திருந்தனர். தற்போது மீண்டும் ஒரு ரசிகர் ரஜினிக்கு சமர்ப்பணமாகத் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.