A R Rahman: பலகற்றோம் யாம் என்று தற்புகழ வேண்டாம்... இளையராஜாவை சீண்டுகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்!
இளையராஜா பாடல்கள் காப்புரிமை குறித்து ஏ ஆர் ரஹ்மான் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்
இளையராஜா வைரமுத்து மோதல்
முட்டையில் இருந்து கோழி வந்ததா. கோழியில் இருந்து முட்டை வந்ததா என்கிற காலம் காலமாக விடையில்லாத புதிருக்கு நிகராக தற்போது வைரமுத்து மற்றும் இளையராஜாவுக்கு இடையிலான பிரச்சனை உருவெடுத்துள்ளது. இசையில்லாமல் பாடல் எப்படி உருவாகும் அதனால் நான் இசையமைத்த பாடல்களின் உரிமை எனக்கே சொந்தம் என்று இளையராஜா வழக்கு தொடர, பாடல்வரிகள் இல்லாமல் பாட்டு எப்படி? அதனால் இந்த பாட்டு எல்லாருக்கும் சொந்தமானது என்று வைமுத்து இன்னொரு பக்கம். இடையில் தண்ணி கேன் போடவந்த கங்கை அமரன் இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து ஜீரோ என்று தானும் இந்த சர்ச்சையில் சேர்ந்துகொள்ள என கன்னித்தீவு கதையாக தொடர்கிறது இந்த கதை. இதில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இளையராஜாவா வைரமுத்துவா என்று ஒருபக்கம் மோதிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் கூட்டம் போட்டு மேடையில் இதை விவாதப் பொருளாக பேசி வருகிறார்கள். திரையுலகினர் தங்கள் கருத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது அடுத்தபடியாக இந்த பிரச்சனையில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தன் பங்கிற்கு மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.
இளையராஜாவுக்கு ஏ.ஆர் ரஹ்மான் சொல்ல வருவது என்ன?
சில கற்றார் பேச்சும் இனிமையே #tamilsrilanka https://t.co/hGjXm33obk via @YouTube
— A.R.Rahman (@arrahman) May 5, 2024
தனது எக்ஸ் பக்கத்தில் மறைந்த நடிகர் குமரிமுத்துவின் நேர்காணலில் இருந்து ஒரு சிறிய பகுதியை பகிர்ந்துள்ளார் ரஹ்மான். இந்த வீடியோவில் குமரிமுத்து பதினேண்கீழ்கணக்கு நூல் தொகுதியில் ஒன்றான நாலடியார் பாடலின் வரிகளைப் பற்றி பேசுகிறார்.
பல கற்றோம் யாமென்று தற்புகழ
வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும்
காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம்
பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்
- நாலடியார்
என்கிற வரியை குறிப்பிட்டு பேசும் குமரிமுத்து " ரொம்பதான் படித்துவிட்டேன் என்று தன்னைத் தானே தற்புகழ் பேசாதீங்க. சூரியனின் ஒளியில் இருந்து கையிலிருக்கும் குடை தான் காக்கும். ரொம்ப படித்தவனுக்கு கொஞ்சம் படித்தவன் அச்சாணி போன்றவன் இல்லையென்றால் வண்டி ஓடாது." குமரிமுத்துவின் இந்த விளக்கத்தை பகிர்ந்த ரஹ்மான் 'சில கற்றார் பேச்சும் இனிமையே' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக வைரமுத்து " இசை எவ்வளவு பெரிதோ, மொழி அவ்வளவு பெரிது, மொழி எவ்வளவு பெரிதோ, இசை அவ்வளவு பெரிது. இரண்டும் கூடினால் தான் அதற்கு பாட்டு என்று பெயர். ஆனால் சில நேரங்களில் இசையை விட மொழி பெரியதாகவும், மொழியை விட இசை பெரியதாகவும் திகழுகின்ற சந்தர்ப்பங்கள் உண்டு. புரிந்து கொள்பவன் ஞானி. புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி." என்று கூறியதைத் தொடர்ந்து ரஹ்மானின் இந்த பதிவு மறைமுகமாக இளையராஜாவை சுட்டிக்காட்டுவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.