பாலிவுட்டில் பிரிவினை வாதம் குறித்த கருத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் பிரிவினை வாதம் குறித்த தனது கருத்திற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்

படைப்பாற்றல் இல்லாதவர்களின் கைகளில் அதிகாரம் இருப்பதால் பாலிவுட் சினிமாவில் பிரிவினைவாதம் கடைபிடிக்கப்படுவதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் கருத்து பரவலாக எதிப்பை சந்தித்து வருகிறது. திரைப்பட நடிகை மற்றும் பாஜக எம்.பி கங்கனா ரனாவத் உள்ளிட்டவர்கள் ரஹ்மானை கடுமையாக விமர்சித்து பதிவிட்டதைத் தொடர்ந்து தனது கருத்து குறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்
அண்மையில் பிபிசிக்கு அளித்த பேட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் கலந்துகொண்டு பேசினார். இந்த பேட்டியில் தான் இசையமைத்த சாவா திரைப்படம் பிரிவினைவாத உணர்ச்சிகளை தூண்டி பணம் சம்பாதித்ததாக அவர் தெரிவித்திருந்தார். படைப்பாற்ற இல்லாமல் அதிகாரம் கொண்டவர்கள் ஒரு படத்திற்கு யார் இசையமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். இது பிரிவினைவாத எண்ணத்தினால் கூட இருக்கலாம் என்று அவர் இந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
கங்கனா ரனாவத் எதிர்ப்பு
ரஹ்மானின் கருத்து சமூக வலைதளத்தில் வைரலாகி கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. நடிகை மற்றும் பாஜக எம்பியான கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஹ்மானை கடுமையாக சாடி பதிவிட்டிருந்தார். தனது எமர்ஜென்சி படத்தை பிரச்சார திரைப்படம் என்று சொல்லி ரஹ்மான் இசையமைக்க மறுத்ததாகவும் ரஹ்மானைப் போல் வெறுப்பை வெளிப்படுத்தும் நபரை தான் பார்த்ததில்லை என அவர் தனது பதிவில் கூறியிருந்தார். சமூக வலைதளங்களில் ரஹ்மானின் கருத்தை விமர்சித்தும் மதத்தை காட்டி ரஹ்மான் கழிவிரக்கத்தை கோருவதாகவும் பலர் பதிவிட்டு வருகிறார்கள்
ரஹ்மான் விளக்கம்
தனது கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதை அறிந்த ரஹ்மான் தற்போது வீடியோ வெளியிட்டு தனது கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார். " இந்தியா எப்போதும் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாகவும் ,ஆசிரியராகவும் எனது வீடாகவும் இருந்து வருகிறது. சில நேரங்களில் நம்முடைய எண்ணங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படக் கூடியது என்பது எனக்கு புரிகிறது. ஆனால் என்னுடைய இசையால் சேவை செய்வதும் , கெளரவிப்பதுமே என்னுடைய எண்ணமாக இருந்திருக்கிறது. எப்போதும் யாரையும் புண்படுத்த வேண்டும் என்று நான் நினைத்தது இல்லை. ஒரு இந்தியனாக இருப்பதில் நான் பெருமைக் கொள்கிறேன். கருத்து சுதந்திரத்தையும் பல்வேறு கலாச்சார குரல்களை கொண்டாடும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. நேபாள இசை கலைஞர்களுடன் பணியாற்றுவது முதல் ராமாயணா படத்திற்கு இசையப்பது வரை என்னுடைய ஒவ்வொரு பயணமும் என்னுடைய லட்சியத்தை உறுதியாக்கி இருக்கின்றன. இந்த நாட்டிற்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கடந்த காலத்தை கெளரவிக்கும் , நிகழ்காலத்தை கொண்டாடும் , எதிகாலத்தை ஊக்குவிக்கும் இசையை வழங்குவதில் என்னை அர்பணிக்கிறேன். ஜெய் ஹிந்த் , ஜெய் ஹோ" என ரஹ்மான் இந்த வீடியோவில் பேசியுள்ளார்
A.R.Rahman speaks out & responds with clarity.#ARRahman ❤ pic.twitter.com/0YiFOJMA2v
— A.R.Rahman News (@ARRahman_News) January 18, 2026





















