HBD A.R. Rahman :இசை வெள்ளத்தில் மூழ்கடித்த கலைஞன்... இசை சூறாவளி ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாள் இன்று!
HBD A.R. Rahman : எந்த ஒரு வெரைட்டியாக இருந்தாலும் கிளாஸ் ரகமான ஒரு இசையை வழங்குவது ஏ.ஆர். ரஹ்மானுக்கே உரித்தான தனி சிறப்பு
இசையின் மூலம் புதுமைகளை அறிமுகப்படுத்தி கடந்த 32 ஆண்டுகளாக ஆச்சரியங்களுக்கு மேல் ஆச்சரியங்களை தொடர்ச்சியாக வழங்கி ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்து தலைமுறைகளை தாண்டி கொண்டாடப்படும் ஒரு தன்னிகரில்லா கலைஞனாக விளங்கும் ஏ.ஆர். ரஹ்மானின் 57வது பிறந்தநாள் இன்று.
விளையாட்டுத்தனமாக இருக்க வேண்டிய பள்ளிப்பருவத்தில் தனது அதீத திறமையால் 11வது வயதில் ஆர்கெஸ்ட்ராவில் இசையமைக்கத் துவங்கி விட்டார். தமிழ் சினிமாவில் மாபெரும் இசை ஜாம்பவான்களாக கொடி கட்டி பறந்த எம்.எஸ். விஸ்வநாதன், விஜய பாஸ்கர், இளையராஜா உள்ளிட்டோரிடம் உதவியாளராக இருந்த ஏ.ஆர். ரஹ்மான் தனக்கென ஒரு தனி அடையாளத்தை 1992ம் ஆண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' திரைப்படம் மூலம் வெளிப்படுத்தினர். முதல் படத்திற்கே அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
முதல் படத்திலேயே வித்தியாசமான ஒரு இசையை கொடுத்து ஒரு இசை புரட்சியையே ஏற்படுத்திவிட்டார் ஏ.ஆர். ரஹ்மான். மெலடி, ரொமான்டிக், பாஸ்ட் பீட், கானா என எந்த ஒரு வெரைட்டியாக இருந்தாலும் கிளாஸ் ரகமான ஒரு இசையை வழங்குவது ஏ.ஆர். ரஹ்மானுக்கே உரித்தான தனி சிறப்பு. இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.
திரைத் துறையினருக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ஆஸ்கார் விருதினை இந்தியா ஒருமுறையேனும் வென்று விடாத என ஏக்கத்தில் தவித்த திரைத்துறைக்கு 2 ஆஸ்கர் விருதுகளை 2008ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளிலும் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் ஹிந்தி பாடல்களை இந்தி தெரியாதவர்கள் கூட ரசிக்கும் படியாக இருப்பது அவரின் தனி மவுசு. அப்படி ரங்கீலா படத்தில் துவங்கிய அவரின் பாலிவுட் இசை பயணம் தொடர்ச்சியாக தால், ரங் தே பசந்தி, ஜோதா அக்பர், குரு என எண்ணற்ற ஹிட்ஸ் கொடுத்தார். அவரின் இந்தி பாடல்களும் தமிழ் மொழி படங்களை போலவே தாறுமாறான ஹிட் அடித்தன. பொதுவாக இரவு நேரங்களில் இருக்கும் அமைதியான சூழலில் இசையமைப்பது தான் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என அவரே கூறியுள்ளார்.
90ஸ் கிட்ஸ்களின் உலகமாக மாறிய ஏ.ஆர். ரஹ்மான் அவரின் இசை மூலம் அனைவரின் ஐபேட்களிலும் ஊடுருவினார். சினிமா பாடல்கள் மட்டுமின்றி தேசபக்தி பாடல்களுக்கும் சிறப்பான ஒரு இசையை கொடுக்க முடியும் என அவர் நிரூபித்த பாடல் டியூன் தான் 'வந்தே மாதரம்'. நாடி நரம்பு எல்லாம் புடைக்க நாட்டுப்பற்றை விதைத்த இப்பாடல் அனைவராலும் விரும்பி கேட்கப்பட்டது.
ஒரு இசை கலைஞனாகவே பார்த்து வந்த ஏ.ஆர். ரஹ்மானை வெள்ளித்திரையில் முகம் காட்ட வைத்து பிகில் படத்தில் இடம் பெற்ற 'சிங்கப்பெண்ணே...' பாடல் தான்.
இந்த 2024ம் ஆண்டு தொடக்கமே ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. அடுத்தடுத்து வெளியாக தயாராக இருக்கிறது அயலான், லால் சலாம், தக் லைஃப், காதலிக்க நேரமில்லை, விண்ணைத்தாண்டி வருவாயா 2, சங்கமித்ரா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைக்கிறார்.
இந்த ஆண்டும் இசை புயலுக்கு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்!!!