HBD Arvind Sami : சாக்லேட் பாய் டூ ஸ்மார்ட் வில்லன்... ஆணழகன் அரவிந்த்சாமியின் பிறந்தநாள் இன்று!
செக்கச்சிவந்த முகம், நல்ல பர்சனாலிட்டியோடு இருந்த அரவிந்சாமியை தமிழ் சினிமா அப்படியே கவ்விக்கொண்டது.
![HBD Arvind Sami : சாக்லேட் பாய் டூ ஸ்மார்ட் வில்லன்... ஆணழகன் அரவிந்த்சாமியின் பிறந்தநாள் இன்று! 90's Chocolate Boy Arvind Sami celebrates his 53rd birthday today HBD Arvind Sami : சாக்லேட் பாய் டூ ஸ்மார்ட் வில்லன்... ஆணழகன் அரவிந்த்சாமியின் பிறந்தநாள் இன்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/815945aba20fa625e7d700709307844a1687000908965224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஒரு பையன் பாக்கெட் மணிக்காக ஆசைப்பட்டு மாடலிங் துறையில் நுழைந்ததால் கிடைத்தது சினிமா வாய்ப்பு. அந்த பையன் தான் தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் சாக்லேட் பாயாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்த அரவிந்த்சாமி. இவரு பெரிய அரவிந்த்சாமி என்று பலரும் ஆண்களை கிண்டல் செய்வதை நாம் பார்த்து இருப்போம். அப்படி ஆணழகன் என பெயருக்கு சொந்தக்காரரான அரவிந்தசாமியின் 53வது பிறந்தநாள் இன்று.
பாக்கெட் மணிக்காக கல்லூரி நாட்களில் மாடலிங் துறையில் ஈடுபட்டவருக்கு மணிரத்னம் கொடுத்த வாய்ப்பு தான் 'தளபதி' படத்தில் வந்த கலெக்டர் கதாபாத்திரம். செக்கச்சிவந்த முகம், நல்ல பர்சனாலிட்டியோடு இருந்த அரவிந்சாமியை தமிழ் சினிமா அப்படியே கவ்விக்கொண்டது. அடுத்தடுத்து ரோஜா, பம்பாய், இந்திரா, மறுபடியும், என் சுவாச காற்றே என பேக் டு பேக் படங்களின் மூலம் உச்சபட்ச நடிகரானார் அர்விந்த்சாமி. அவருக்குள் இருக்கும் காமெடியை வெளிக்கொண்டு வந்த கதாபாத்திரம் தான் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'மின்சார கனவு' படத்தில் வந்த தாமஸ்.
தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களிலும் நல்ல வரவேற்பை பெற்ற அரவிந்த்சாமி 'அலைபாயுதே' படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்த பிறகு சினிமாவிற்கு விடைகொடுத்து தனது தந்தையின் தொழிலில் கவனம் செலுத்த துவங்கினார். சினிமாவில் மட்டும் ஒரு வெற்றி நாயகனாக இல்லாமல் தொழில் முறையில் ஒரு சக்ஸஸ்ஃபுல் தொழிலதிபராக பல ஆயிரம் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கினார். மிகவும் சுமுகமாக இருந்த அவரது வாழ்க்கை பயணத்தில் திடீரென ஒரு விபத்து ஏற்பட்டதில் முதுகு தண்டில் அடிபட்டதால் நான்கு ஐந்து மாதங்கள் பெட் ரெஸ்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மிகவும் ஸ்மார்ட்டான ஒரு ஹீரோவாக இருந்தவர் திடீரென உடல் எடை போட்டு தோற்றமே மாறியது. தனிமையில் தவித்தவரை மீண்டும் சினிமா அழைத்தது.
சினிமாவில் இருந்து விலகி இருந்தவருக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார் மணிரத்னம். கடல் படம் மூலம் மீண்டும் சினிமாவில் நுழைந்தவர். இந்த முறை ஒரு ஸ்மார்ட் வில்லனாக வந்தார். தனி ஒருவன், போகன் போன்ற படங்களில் கலக்கினார். அதனை தொடர்ந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அரவிந்த்சாமி நரகாசுரன், கள்ளபார்ட், வணங்காமுடி, சதுரங்க வேட்டை 2 , புலனாய்வு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அரவிந்சாமியின் முதல் என்ட்ரியில் ரோமியோவாக கலக்கியதை காட்டிலும் செகண்ட் இன்னிங்ஸ் அவரின் வேறு ஒரு முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)