65 years of Nadodi Mannan : மன்னனா, நாடோடியா? தீர்ப்பை மக்களிடம் கொடுத்த எம்.ஜி.ஆர்... அண்ணாந்து பார்க்க வைத்த நாடோடி மன்னன்
இயக்குநர் எம்.ஜி.ஆர், தயாரிப்பாளர் எம்.ஜி.ஆர் என்ற புதிய அடையாளத்தை கொடுத்த நாடோடி மன்னன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 65 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் என கொண்டாடப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் புகழின் உச்சியில் கொண்டாடப்பட்ட நேரத்தில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்ற புதிய பரிணாமத்தை அடையாளமாக்கியது 1958ம் ஆண்டு வெளியான 'நாடோடி மன்னன்' திரைப்படம். மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த இப்படம் வெளியாகி இன்றுடன் 65 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
எம்.ஜி.ஆரின் கனவு :
பிரான்க் லாய்ட் எழுதி, இயக்கிய வரலாற்று நாடகமான 'இஃப் ஐ வேர் ஏ கிங்' என்ற நாடகத்தை பார்த்த நாள் முதல் இதை படமாக்க வேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்தது. அவரே தயாரிப்பாளர் என்பதால் தண்ணீர் போல பணத்தை செலவு செய்து மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கினார். உச்சத்தில் சம்பளம், பாரபட்சம் இன்றி தினமும் விருந்து சாப்பாடு, எக்கச்சக்கமான ஃபிலிம், ஏராளமான ரீ டேக் என படத்தின் பட்ஜெட் எகிறியது. "வெற்றி பெற்றால் நான் மன்னன்... இல்லயேல் நாடோடி" என சொல்லி இதை ஒரு பரிசோதனை முயற்சியாக மேற்கொண்டார். பதிலை மக்கள் கையில் கொடுத்தார்.
எம். ஜி. ஆர், பானுமதி, சரோஜா தேவி, பி. எஸ். வீரப்பா, எம். என். ராஜம், எம். என். நம்பியார், சகுந்தலா, சந்திரபாபு, முத்துலட்சுமி, கே.ஆர்.ராம்சிங், எம். ஜி. சக்கரபாணி, ஈ.ஆர்.சகாதேவன், .எஸ்.அங்கமுத்து என மிக பெரிய திரை பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். காட்சிகள் சிறப்பானதாக அமைய வேண்டும் என்பதற்காக எடுத்த காட்சிகளையே மீண்டும் மீண்டும் எடுக்க கோபமான பானுமதி "மிஸ்டர் ராமச்சந்திரன்..." என அவரிடமே துணிச்சலாக பேசி திரைப்படத்தில் இருந்து விலகி கொண்டார்.
அதன் பின்னரே சரோஜா தேவி என்ட்ரி நடந்தது. இப்படம் பாதி வரை கருப்பு வெள்ளையாகவும் மீதி பாதி கேவா கலர் பயன்படுத்தப்பட்டு கலர் படமாகவும் வெளியானது. கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு தேவையான புட்டேஜ்கள் படமாக்கப்பட்டது. அதை கத்தரி போட்டு போட்டு சுருக்கி கடைசியில் எம்.ஜி.ஆரே படத்தை வெளியிட்டார். படத்தின் ரன்னிங் டைம் மூன்றே கால் மணி நேரம் என்றாலும் அதை கொஞ்சம் கூட போரடிக்காமல் நகர்த்தியது படத்தை வெற்றிப்பாதையில் அழைத்து சென்றது.
பத்து மடங்கு லாபம் :
பல கிண்டல் கேலிகளுக்கு நடுவில் வெளியான இப்படத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். 18 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்து ஒரு கோடியே 10 லட்ச ரூபாயை வசூலித்து இமாலய சாதனை படைத்தது.
அரசியல் அஸ்திவாரம் :
தான் நடிக்கும் ஒவ்வொரு படம் மற்றும் பாடலிலும் தனது கருத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என விடாப்பிடியாக இருப்பவர் தான் இயக்கிய படத்தை மட்டும் விடுவாரா என்ன? அவரின் அரசியல் சார்ந்த வசனங்களை படம் முழுக்க தெறிக்க விட்டு இருப்பார் கவியரசு கண்ணதாசன். இதுவே அவரின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாய் அமைந்தது.
22-ம் தேதியின் ரகசியம் :
22ம் தேதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உள்ளது. நாடோடி மன்னன் திரைப்படம் மட்டுமின்றி அவர் நடித்த மலைக்கள்ளன், இதயக்கனி உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள் 22ம் தேதி தான் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் சண்டை காட்சிகளும், எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் பாடல்களும், சந்திரபாபுவின் நகைச்சுவையும் படத்தின் வெற்றியை உறுதி செய்தன. எம்.ஜி.ஆர் திரைவாழ்க்கையில் மட்டுமின்றி அரசியல் வாழ்க்கைக்கும் அஸ்திவாரமாய் அமைந்த 'நாடோடி மன்னன்' படம் வெளியான 19 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வரானார்.