33 years of Durga : நாயும் குரங்கும் கூட அசால்ட் செய்த படம்... 90-ஸ் கிட்ஸ் கொண்டாடிய துர்காவுக்கு 33 வயசாயிடுச்சு!
90ஸ் கிட்ஸ் கொண்டாடிய பேபி ஷாமிலியின் 'துர்கா' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது
90களில் குழந்தைகளுக்கான படங்கள் பெரும்பாலும் நல்ல வரவேற்பை பெரும். அப்படி ராம நாராயணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி அவரே இயக்கிய படம் தான் "துர்கா". தெலுங்கில் "லட்சுமி துர்கா" என்ற பெயரில் வெளியான இப்படம் பின்னர் 1992-ஆம் ஆண்டு தமிழில் வெளியானது. பேபி ஷாமிலி இரட்டை கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
விலங்குகளை பயன்படுத்தி படங்களை எடுப்பதில் பிரபலமானவரான ராம நாராயணன் குரங்கு மற்றும் நாயை இப்படத்தில் பயன்படுத்தி இருந்தார். ராமுவாக குரங்கும் ராஜாவாக நாயும் அறிவாளியாக இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நிழல்கள் ரவி, கனகா, கிட்டி, சத்யப்ரியா, செந்தில், வாகை சந்திரசேகர், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சங்கர் கணேஷ் இசையில் "பாப்பா பாடும் பாட்டு" மிகவும் பிரபலமான பாடலாக அமைந்தது.
வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒரே செல்ல குழந்தையான துர்காவாகவும், அதே போன்ற உருவ அமைப்பை கொண்ட வாகை சந்திரசேகர் மகள் மல்லிகாவாகவும் பேபி ஷாமிலி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சொத்துக்காக ஆசைப்பட்டு துர்காவை கொலை செய்ய அவளின் சித்தப்பாவே திட்டம் தீட்ட அவளை காப்பாற்ற ராமுவும் ராஜாவும் உதவி செய்ய அவர்களுக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்கள் நிழல்கள் ரவி மற்றும் கனகா.
இவர்கள் அனைவரும் துர்காவுக்கு காவலாக இருக்க குழந்தையை கொள்ள முடியவில்லையே என யோசித்து கொண்டு இருக்கும் வேலையில்தான் அதேபோன்ற உருவம் கொண்ட மல்லிகாவை பார்க்கிறார்கள். அதனால் மல்லிகாவிடம் நாங்கள் சொல்வது போல நீ கேட்காவிட்டால் உன்னுடைய அப்பாவை கொன்றுவிடுவோம் என மிரட்டி அவர்களுடைய திட்டத்துக்கு மல்லிகாவை பணிய வைக்கிறார்கள்.
மல்லிகாவை துர்கா வீட்டுக்கு அழைத்து சென்று குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இருவரில் யார் உண்மையான துர்கா என தெரியாமல் முழிக்கிறார்கள். அப்போது இரண்டு குழந்தையையும் தீ மிதிக்க வைத்து யார் உண்மையான துர்கா என்பதை கண்டுபிடிக்கலாம் என திட்டம் போடுகிறார்கள். சரியாக அந்த சமயத்தில் மல்லிகாவின் அப்பா வந்து நடந்த உண்மையை எல்லாம் சொல்லி மல்லிகாவை காப்பாற்றி துர்காவின் சித்தப்பாவை போலீசில் பிடித்து கொடுக்கிறார்கள். பிறகு அனைவரும் ஒன்றாக சந்தோஷமாக இருக்கிறார்கள்.
குழந்தையை காப்பற்றுவதற்காக ராஜாவும் ராமுவும் செய்யும் சேட்டை காட்சிகள் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். ஐந்து அறிவே உள்ள பிராணிகள் எத்தனை பிரமாதமாக நடிக்கிறது என பாராட்டாதவர்களே இருக்க முடியாது. பெரிய பெரிய நடிகர்களை கூட தூக்கி சாப்பிடும் அளவுக்கு அவ்வளவு கியூட் ரியாக்ஷன் கொடுக்கும் ஷாமிலிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்த இப்படம் இன்றுடன் 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.