27 years of Kadhal Kottai : நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா... வார்த்தைகளுக்கு வடிவம் கொடுத்த தலைசிறந்த காதலர்கள் சூர்யா - கமலி...
தரமான திரைக்கதை தான் படத்துக்கு அஸ்திவாரம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வெளியான அகத்தியனின் 'காதல் கோட்டை' படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத சில படைப்புகள் எத்தனையோ வந்ததுண்டு. அதிலும் ஒரு சில திரைப்படங்கள் எல்லா காலகட்டத்துக்கும் பொருத்தமானதாக இருக்கும். அப்படி தமிழ் சினிமா கண்ட ஒரு ரம்மியமான காதல் கதை தான் பார்க்காமலே காதல் என்ற புதிய விஷயத்தை புகுத்திய 'காதல் கோட்டை' திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தமிழ் சினிமாவில் எத்தனையோ வகையான காதல் படங்கள் வெளியாகியிருந்தாலும் 'பார்க்காமலே காதல்' எந்த புதுமையான சிந்தனையை படமாக்கினார் இயக்குநர் அகத்தியன். அந்த காலத்து தலைமுறையினரை மட்டுமின்றி இன்றைய இளைய சமூகத்தினர் மத்தியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படமாக விளங்குவது தான் அந்த திரைக்கதைக்கு உள்ள தனிச்சிறப்பு.
அந்த கால மனிதர்கள், அவர்களின் மனநிலை, காதலுக்கு இருந்த எதிர்ப்புகள், காதலர்கள் காதலுக்கு கொடுத்த மரியாதை இப்படி அந்த காலகட்டத்தை அசைபோடும் ஒரு கண்ணாடியாக திரைப்படங்கள் விளங்குகின்றன. ஆறாவது விரலாக இன்றைய தலைமுறையினருக்கு மொபைல் போன் இருக்கையில் தொலைபேசி, கடிதம் என்ற ஒன்று இருந்ததையும் அதை எப்படி காதலர்கள் பரிமாறிக் கொண்டார்கள் என்பதையும் அழகாக சித்தரித்த படம்.
காதல் என்றாலே அழகு, ஸ்டேட்டஸ், கவர்ச்சி, பொழுதுபோக்கு என இருக்கும் இந்த கால இளைஞர்கள் மத்தியில் வார்த்தைகள் மூலம் காதலை பரிமாறி கொண்டவர்களின் காதல் கதை சற்று வித்தியாசமாகவே தோன்றும். தரமான திரைக்கதை தான் படத்துக்கு அஸ்திவாரம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வெளியான படம் தான் அகத்தியனின் 'காதல் கோட்டை'. அந்த கதைக்கு மேலும் உயிர்கொடுத்தனர் சூர்யாவாக அஜித்தும் கமலியாக தேவயானியும். அவர்களின் உயிரோட்டத்திற்கு உறுதுணையாய் வாழ்ந்தார்கள் மணிவண்ணன், பாண்டு, சபீதா ஆனந்த், ஹீரா, கரண், ராஜீவ், தலைவாசல் விஜய், இந்து உள்ளிட்டோர்.
பார்க்காமலே காதல் என்ற ஒரு கான்செப்ட் விமர்சனத்துக்கு உட்பட்டது, சாத்தியமில்லாதது என்றாலும் இயக்குநர் அந்த கதையை சித்தரித்த விதமும் அந்த உணர்ச்சியை பார்வையாளர்கள் மீது பாய்ச்சிய விதமும் பாராட்டுக்குரியது. அஜித் மற்றும் தேவயானி இருவரின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்த படம். இப்படம் இன்றுடன் 27 ஆண்டுகளை கடந்தும் காதல் உள்ள வரையிலும் சினிமாவில் காதல் சென்டிமென்ட் உள்ள வரையிலும் சூர்யாவும் கமலியும் நிச்சயம் காதல் கோட்டையை ஆளும் காதலர்களாகவே நிலைப்பார்கள்.