18 years of Kaadhal : உனக்கென இருப்பேன்! உயிரையும் கொடுப்பேன்! 'காதல்' வெளியான நாள் இன்று
சாதி எனும் கொடூரம்தான் காதலுக்கு முதன்மையான எதிரி என்பதை வெளிக்காட்டிய காதல் திரைப்படம் வெளியான நாள் இன்று
தமிழ் சினிமாவின் நூறு ஆண்டுகால வரலாற்றில் காதல் இல்லாத படங்களை விரல்விட்டு என்னும் அளவிற்குத்தான் இருக்கும். அந்த அளவிற்கு சினிமாவில் காதல் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இப்படி காதலை மையமாக வைத்து வெளியான ஏராளமான படங்களில் ஒரு சில படங்கள் காலங்களை கடந்தும் காவியமாக போற்றப்படும். அப்படி ஒரு திரைப்படம் தான் 'காதல்'. 18 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களை வியக்க வைக்கும் ஒரு காவியமாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
சாதி வெறி முகமூடியை கிழித்து எறிந்த காதல் :
இயக்குனர் பாலாஜி சக்திவேல் சாமுராய் திரைப்படத்தை தொடர்ந்து இயக்கிய இப்படம் அவரின் தனித்துவத்தை முழுமையாக வெளிக்காட்டிய திரைப்படம். சமூகத்தின் மீது அவரின் பார்வையின் வெளிப்பாடாக இருந்தது காதல் திரைப்படம். காதல் எந்த அளவிற்கு சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக வெளியான திரைப்படம். சாதி எனும் கொடூரம்தான் காதலுக்கு முதன்மையான எதிரி என்பதை வெளிக்காட்டியது. சாதி வெறி பிடித்தவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதை தோலுரித்து காட்டிய திரைப்படம் காதல்.
உறைய வைத்த கிளைமாக்ஸ் :
வசதியான குடும்பத்தை சேர்ந்த செல்ல பெண்ணாக சந்தியா, ஏழை மெக்கானிக்காக பரத் இருவரின் கோழைத்தனமான தைரியம், அப்பாவித்தனமான நடிப்பு என அனைத்தும் கச்சிதமாக பொருந்தியது. மதுரை மண்ணின் இயல்பான உணர்வுகளை பதிவு செய்த திரைப்படம். வீட்டைவிட்டு ஓடிப்போகும் காதலர்கள் பல இடங்களில் தஞ்சம் அடைய கடைசியில் தேடி கண்டுபிடிக்கும் பெண்ணின் குடும்பம் ஆசை வார்த்தைகளை காட்டி காதல் ஜோடியை ஊருக்கு கூட்டி வந்து வைத்து செய்கிறார்கள். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பார்வையாளர்களை சோகத்தில் உறைய வைக்கிறது. இவை சமூகத்தில் இருக்கும் அவலங்கள் என்பதை காட்சிப்படுத்தி காட்டியவர் பாலாஜி சக்திவேல். இப்படத்துக்கு பக்கபலமாய் இருந்தது அறிமுக இசையமைப்பாளர் ஜோஷுவா ஸ்ரீதரின் இசை. கல்லையும் கரைக்க கூடிய இசையால் அனைவரையும் உருக வைத்து. படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் திரைக்கதையை முழுமையாக உள்வாங்கி அதற்கு ஏற்றாற்போல் யதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தினர்.
காதல் (2014)
— சினிமா ராசா (@cinemaraasa) May 6, 2020
I think, everyone remember this movie directed by Balaji Sakthivel. Atleast, you people will remember the climax scene.😒
Did you know ?
It got remade into 5 languages.(Excluding Telugu Dubbing)
(1/6)#Kaadhal #BalajiSakthivel #CinemaRaasa pic.twitter.com/WmXRA4Nhal
வன்முறைகள் தொடர்கின்றன :
ஒரு உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் அதை மக்களுக்கு புரியும் வகையில் சரியான முறையில் கொண்டு சேர்த்த இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவர். இருப்பினும் இன்றும் இது போன்ற நிகழ்வுகள் இந்த சமூகத்தில் நடந்தேறிக்கொண்டு தான் இருக்கிறது என்பதுதான் வருத்தமான ஒரு விஷயம். இது போன்ற வன்முறைகளை தடுக்க அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.