(Source: ECI/ABP News/ABP Majha)
12B Movie : மாதவன்... அஜித்.. விக்ரம்... கடைசியில் ஷியாம்... இதே நாளில் வெளியான 12B!
1998ம் ஆண்டு வெளியான ஆங்கில திரைப்படமான ஸ்லைடிங் டோர்ஸ் எனும் படத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது 12B திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
ஒளிப்பதிவாளராக இருந்த ஜீவா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அவரே எழுதி இயக்கிய திரைப்படம் "12 B". 2001ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஷாம், ஜோதிகா, சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விவேக், சுனில் ஷெட்டி, சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
விமர்சன ரீதியாக வரவேற்பு :
வழக்கமான காதல் கதை போல் இல்லாமல் சற்று குழப்பமாகவும் வித்தியாசமாகவும் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் காதுகளுக்கு இனிமை. இப்படத்தில் மையப் பொருளாக இருந்தது 12B பஸ். படத்தின் இயக்குனர் தனது கல்லூரி காலங்களில் பயணம் செய்த 12B பஸ்சின் நினைவாக இப்படத்திற்கு 12B என தலைப்பிட்டுள்ளனர். கலவையான விமர்சனங்கள் பெற்ற இப்படம் சிலருக்கு மிகவும் ஸ்வாரஸ்யமாகவும் சிறகு சற்று விளங்காமலும் இருந்தது போன்ற விமர்சனங்கள் எழுந்தன.
12B படத்தின் கதை என்ன ?
ஒரு இளைஞன் 12B பேருந்தில் ஏறியிருந்தால் அவன் வாழ்க்கை எப்படி மாறி இருக்கும். பேருந்தை தவறவிட்டதால் அவனது வாழ்க்கை எப்படி மாறியது என்பது தான் படத்தின் கதைக்களம். 1998ம் ஆண்டு வெளியான ஆங்கில திரைப்படமான ஸ்லைடிங் டோர்ஸ் எனும் படத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது 12B திரைப்படம்.
இரண்டு கனவுக்கன்னிகள் ஒரே படத்தில் :
12B திரைப்படம் வெளியான சமயத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் நடிகை சிம்ரன் மற்றும் ஜோதிகா. இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வந்த தருணத்தில் இயக்குனர் ஜீவா இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைத்தார். ஏற்கனவே இவர்கள் இருவரும் வாலி திரைப்படத்தில் நடித்துள்ளனர். இருவரின் நடிப்பு இப்படத்தில் அபாரமாக இருந்தது பாராட்டை பெற்றது.
ஹீரோ வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்கள்:
முதலில் இப்படத்தின் ஹீரோவாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாதவன். அவருக்கு அடுத்து அணுகப்பட்டவர்கள் அஜித் மற்றும் விக்ரம் அனால் இவர்கள் இருவரும் வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த வாய்ப்பு நடிகர் ஷாம் வசம் வந்தது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷாம் திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி இப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த ஒரே தமிழ் திரைப்படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ஜோதிகாவின் தாயாக பெங்காலி நடிகை முன் முன் சென் நடித்திருந்தார்.
ஒளிப்பதிவாளர் ஜீவாவின் இயக்கத்தில் வெளியான படங்கள்:
காதலன், ஜென்டில்மேன், இந்தியன், வாலி, குஷி, சிநேகிதியே போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஜீவா 12B திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து அதற்கு பின்னர் உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களி இயக்கினார். நடிகர் ஜெயம் ரவி, லட்சுமி ராய், கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பின் போது காலமானார் இயக்குனர் ஜீவா. அவரின் இழப்பு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.