Lok sabha Election Result: வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்டம்..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தூத்துக்குடி, கோவில்பட்டி தொகுதிகளுக்கு 21 சுற்றுகளாகவும், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் 19 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணப்படுகிறது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடந்தது. இதில் 66.88 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளன. 243 கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்து எண்ணப்படுகின்றன.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை சட்டமன்ற தொகுதிகள் வாரியாக 6 அறைகளில் நடக்கிறது. இதற்காக ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் வெப் கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் ஆக மொத்தம் 349 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி, கோவில்பட்டி தொகுதிகளுக்கு 21 சுற்றுகளாகவும், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் 19 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணப்படுகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பறை அனைத்து வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட உள்ளன. அதன்பிறகு 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா 5 வி.வி.பேட் கருவிகளில் உள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டு சரிபார்க்கப்படும். அதன் பிறகே அதிகார்ப்பூர்வ முடிவு அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், அதிகாரிகள் வருவதற்காக தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வேட்பாளர்களின் முகவர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக வெவ்வெறு வண்ண்களில் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டு உள்ளன. முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு என்னென்ன பொருட்கள் கொண்டு வரலாம், என்னென்ன பொருட்கள் கொண்டு வரக்கூடாது என்பது குறித்தும் விளக்கி கூறப்பட்டு உள்ளது.
மேலும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.