Lok Sabha Election 2024: அனைத்து விவிபாட் சீட்டுகளையும் எண்ண கோரிக்கை - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Lok Sabha Election 2024: வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்த உதவும், விவிபேட் சீட்டுகளை முழுமையாக எண்ணப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Lok Sabha Election 2024: விவிபேட் சீட்டுகளை முழுமையாக எண்ணப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், VVPAT வாக்குச் சீட்டுகளை முழுமையாகக் கணக்கிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடமும், மத்திய அரசிடமும் விளக்கம் கோரியுள்ளது. விவிபாட் என்பது வாக்காளர் தாங்கள் யாருக்கும் வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள உதவும், ஒரு சுயாதீன வாக்குச் சரிபார்ப்பு அமைப்பாகும்.
தற்போதைய நடைமுறை:
தற்போதைய நடைமுறையின்படி, தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஈவிஎம் இயந்திரங்கள் உடன் இனைக்கப்பட்ட, VVPAT இயந்திரங்களின் வாக்குச் சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன. வாக்களார் வாக்களித்த பிறகு VVPAT ஆனது ஒரு காகிதச் சீட்டை உருவாக்குகிறது, அதை வாக்காளர் பார்த்து, தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள முடியும், மேலும் அந்த காகிதச் சீட்டுகள் சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்பட்டு தேவை ஏற்படின் பயன்படுத்தப்படும். உதாரணமாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் எந்த சின்னத்தில் எத்தனை வாக்குகள் என்பதை உறுதி செய்ய முடியும். 2019 ஆம் ஆண்டில், ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒரு சட்டமன்றப் பகுதிக்கு சரிபார்க்கப்படும் VVPAT வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையை, ஒன்றிலிருந்து 5 ஆக அதிகரிக்க உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.
பொதுநல வழக்கு:
இந்த சூழலில் தான், VVPAT காகிதச் சீட்டுகள் மூலம் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து EVM களை மட்டும் சரிபார்ப்பதற்கு மாறாக, தேர்தலில் VVPAT சீட்டுகள் முழுமையான கணப்பிடப்பட வேண்டும் என அருண் குமார் அகர்வால் எனும் சமூக ஆர்வலர் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரே நேரத்தில் சரிபார்ப்பு செய்யப்பட வேண்டும். அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகளை இந்த பணியில் ஈடுபடுத்தினால், ஐந்து முதல் ஆறு மணி நேரத்தில் VVPAT சீட்டுகளை முழுமையாக கணக்கிடலாம். ஏறக்குறைய 24 லட்சம் VVPAT களை வாங்குவதற்கு அரசாங்கம் கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது, ஆனால் தற்போது, சுமார் 20,000 VVPAT களின் VVPAT சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன” என முறையிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவு:
மேலும், VVPATகள் மற்றும் EVMகள் தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. EVM மற்றும் VVPAT வாக்கு எண்ணிக்கையில் அதிக எண்ணிக்கையிலான முரண்பாடுகள் நிலவுகின்றன. எனவே, அனைத்து VVPAT சீட்டுகளையும் எண்ண வேண்டியது அவசியம் எனவும் மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தொடர்ந்து, இதுதொடர்பாக தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 17ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.