CM Stalin: ”கச்சத்தீவை வைத்து திசை திருப்புறீங்களா?” - பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
CM Stalin: பிரதமர் மோடி திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடுவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்
முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி:
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
3. பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?
திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே” என குறிப்பிட்டுள்ளார்.
பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
— M.K.Stalin (@mkstalin) April 1, 2024
1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
2. இரண்டு இயற்கைப்…
கச்சத்தீவு விவகாரத்தை கையிலெடுத்த பிரதமர் மோடி:
கச்சத்தீவு அண்டை நாடான இலங்கைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, எப்படி விட்டுக்கொடுத்தது என்பது தொடர்பான தகவல்களை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்று வெளியிட்டார். இதுதொடர்பாக ஆங்கில நாளேடுகளில் வெளியான செய்திகளை குறிப்பிட்டு, பிரதமர் மோடி டிவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், பேச்சு வார்த்தைகள் ஒருபுறமிருக்க, தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு குறித்து வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அம்பலப்படுத்தியுள்ளன. காங்கிரசும் திமுகவும் குடும்ப கட்சிகள். அவர்கள் தங்கள் சொந்த மகன்கள் மற்றும் மகள்கள் உயர வேண்டும் என்று மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்கள் வேறு யாரையும் பொருட்படுத்துவதில்லை.
கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என பிரதமர் மோடி சாடியிருந்தார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் செய்தியாளர்களை சந்தித்து, கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது தொடர்பான பல்வேறு தகவல்களை வெளியிட்டார். இந்நிலையில் தான் தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுவதாக, பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.