Karnataka Election: வெளியானது கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி.. தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு..! முழு விபரம்!
Karnataka Election 2023 Date: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Karnataka Assembly Election 2023: கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தல் வரும் மே மாதம் 10 தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, மே மாதம் 24ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படவேண்டியது விதிமுறை. கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும் 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்கு அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என கூறினார். மேலும், கடந்த 2018 - 19 தேர்தலுக்குப் பிறகு 9 லட்சத்து 17 ஆயிரம் பேர் புதிதாக வாக்களிக்கவுள்ளனர். மேலும், 17 வயதைக் கடந்த புதிய வாக்காளர் அட்டைக்காக ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்னப்பித்துள்ளனர். ஏப்ரல் 1ஆம் தேதி 18வயதை எட்டுபவர்கள் அனைவரும் இந்த தேர்தலில் வாக்களிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், “வரும் மே மாதம் 13 தேதி ஒரே கட்டமாக 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 36 தனித் தொகுதிகளும், 15 பழங்குடியினர் தனித்தொகுதிகளும், 173 பொதுத் தொகுதிகளும் உள்ளன. கடந்த பொதுத்தேர்தலின் போது 61 தொகுதிகள் பதற்றமானதாக இருந்தது. தற்போது அது 81ஆக அதிகரித்துள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது. இது காங்கிரஸின் தெளிவான அரசியல் நகர்வாக கருதப்படுகிறது. காங்கிர்ஸுடன் கைகோர்க்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு மீதமுள்ள 100 தொகுதிகளில் ஒதுக்கீடு வழங்கப்படவே இந்த நகர்வு என கூறப்படுகிறது.
அதேபோல் ஆளும் பாஜகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. டெல்லி, பஞ்சாப், குஜராத்தை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி கர்நாடகாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீப காலத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டார். அதேபோல் பிரதமர் மோடியும் கர்நாடகாவில் 13.71 கிமீ தொலைவு மெட்ரோ ரயில் பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 7 முறை கர்நாடகாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகா மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்துள்ளது என்பது காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள அனைவரும் கர்நாடகாவிற்கு படை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தது குறிப்பிடத்த்க்கது. இம்முறை பெரும்பான்மையை வெல்ல அனைத்து கட்சிகளும் பெரும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றன.