ABP NADU Exclusive: அரசியலை விட்டு விலக நினைத்த அமைச்சர் மெய்யநாதன்..முதல்வர் ஸ்டாலின் சொன்ன ஒரு வார்த்தை!
முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மக்களுக்கு உதவும் அரிய வாய்ப்பை தந்ததால் இன்று அமைச்சராகவும், தொகுதி மக்களின் பேரன்பை பெற்றவராக இருந்துள்ளேன் என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

அமைச்சர் மெய்யநாதன் ஏபிபி நாடுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தான் ஆலங்குடி தொகுதிக்கு என்ன செய்யப் போகிறேன் என்பதை தெரிவித்துள்ளார். அதனைப் பற்றிக் காணலாம்.
விவசாயிகளுக்கு முக்கியத்துவம்
2026 தேர்தலில் ஆலங்குடியில் அறிவுசார் மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதை திறந்து போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க ஆசைப்படுகிறேன். அதேபோல் இது விவசாயிகள் அதிகம் வாழும் பகுதியாகும். கூடுதலாக அவர்களுக்கு என்னென்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். குறிப்பாக வேளாண் பொருட்களுக்கு மதிப்பு கூட்டும் தொழிற்சாலை கொண்டு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். இங்கு விளையும் கரும்புகளை அரைக்க வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் சூழல் உள்ளது. அதனால் விவசாயிகளுக்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
கல்வியில் முன்மாதிரியாக திகழ வேண்டும்
அதேசமயம் ஆலங்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி கொண்டு வந்தேன். அதேபோல் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள ஒரு அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி கொண்டு வர வேண்டும். இப்போது எனது தொகுதிக்குட்பட்ட கைக்குறிச்சியில் அமைந்துள்ள மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அதற்கு நிரந்தரமாக ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்பது விருப்பமாகும்.
அரசியலை விட்டு விலக நினைத்தேன்
தொடர்ந்து தன்னுடைய அரசியல் பயணம் பற்றி பேசிய 2006,2011ல் ஒன்றிய பெருந்தலைவர் ஆவதற்கும், 2016ல் எம்.எல்.ஏ., 2021ல் அமைச்சர் என ஒரு சாதாரண தொண்டனை இந்த உயரத்துக்கு அழைத்து வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். என் மீதான நம்பிக்கையில் எனக்கு முதல்முறையாக அமைச்சர் பொறுப்பை வழங்கினார். அந்த அடிப்படையில் நான் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க போனேன். என்னை தடுத்த அவர் திமுக சுயமரியாதை இயக்கம். இனி எந்த சூழலிலும் காலில் விழக்கூடாது என என்னை அறிவுறுத்தினார்.
உயர்ந்த பதவியில் அவர் என்னை அமர்த்தியபோது எனக்கு ஆனந்த கண்ணீர் தான் வந்தது. என் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்ச்சி என்னவென்றால், நான் ஒரு கட்டத்தில் அரசியலை விட்டு போய்விடலாம் என நினைத்தேன். 2018ல் கஜா புயல் தாக்கியபோது ஆலங்குடி தொகுதி வளம் நிறைந்த இடமாக இருந்த நிலையில் பலகோடி மரங்கள் சாய்ந்தன. பல கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்தபோது அவர்களின் அழுகுரல்களை கேட்ட நிலையில், இதிலிருந்து நாம் எப்படி மீள போகிறோம் என்ற அதிர்ச்சியான நிலையில் இருந்தேன். கிட்டதட்ட 77 ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறது. நாம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., என்பதால் இவர்களுக்கு எப்படி உதவப்போகிறோம் என மிகப்பெரிய மன அழுத்தம், வேதனை ஏற்பட்டது.
நான் இதோடு அரசியலை விட்டு வெளியேறி விடலாமா என்று கூட நினைத்தேன். இதற்கிடையில் முதலமைச்சரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அப்போது நான் ஒரு பகுதியில் மக்களை சந்தித்துக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம், “கஜா புயலால் உங்கள் தொகுதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் மக்களோடு மக்களாக இருங்கள். அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் என அனைத்தையும் வாங்கி கொடுங்கள் என கூறினார். தலைவர் மக்களோடு இருக்க சொன்ன அந்த ஒத்த வார்த்தை, எனக்கு மிகப்பெரிய மன தைரியத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தது.
தமிழகம் முழுதும் உள்ள திமுகவினரிடம் இருந்து பெறப்பட்ட நலத்திட்ட பொருட்கள் மூலம் கிட்டதட்ட 65 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கினேன். இன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அன்று முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவர் ரூ.50 லட்சம் சொந்த நிதியில் இருந்து கொடுத்து 5 கிலோ அரிசி கொண்ட பையை 10 லாரிகளில் அனுப்பி வைத்தார். இப்படியாக முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கஜா புயலின்போது மக்களுக்கு உதவும் அரிய வாய்ப்பை தந்ததால் இன்று அமைச்சராகவும், தொகுதி மக்களின் பேரன்பை பெற்றவராக இருந்து வருகிறேன்” என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.




















