Karnataka Election Result: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..! கர்நாடகாவில் வெற்றிக்கனியை பறிக்கப்போவது யார்?
Karnataka Election Result 2023: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Karnataka Election Result 2023: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சட்டமன்ற தேர்தல்
மத்தியில் ஆளும் அரசாக உள்ள பாஜக தென்னிந்தியாவில் ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகாவாகும். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநிலத்திற்கு கடந்த மார்ச் 29 ஆம் தேதியன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாள் பற்றிய அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். அதன்படி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. கடந்த ஒரு மாதமாகவே கர்நாடகா முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டியது. திரும்பும் திசையெங்கும் அரசியல் கட்சியினர் பிரச்சாரம், தொண்டர்கள் அணிவகுப்பு, வித்தியாசமான வாக்கு சேகரிப்பு என இந்தியா முழுமைக்கும் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடப்பாண்டு நடக்கவுள்ள தேர்தல்கள் அரசியல் கட்சிகள் இடையே மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதற்கு முன்மாதிரியாக கர்நாடகா சட்டமன்ற தேர்தல் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் என பாஜக ஒருபுறம் களமிறங்க, மறுபுறம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் வருகை தந்தனர்.
விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு
திட்டமிட்டபடி கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதில் 73.19 சதவீதவாக்குகள் பதிவாகிய நிலையில் ஆட்சி அமைக்க 113 இடங்களில் வெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும் அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி யாருக்கு ஆதரவு தரும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆட்சியமைக்கப்போவது யார்?
பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், சுயேட்சைகள் சேர்த்து மொத்தம் 2613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு மண்டல மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 2 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இன்று மாலைக்குள் 16வது சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கப் போவது யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்து விடும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணி 36 மையங்களில் நடைபெறுகிறது.