'நீட் தேர்வின் மூலமாக ஏழை, எளிய மாணவர்கள் பயனடைவது திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை' -அண்ணாமலை
கடந்த 8 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் பல்வேறு நன்மைகள் சென்று அடைந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் மற்றும் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுரேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் உரையாற்றிய அண்ணாமலை, கடந்த 8 ஆண்டு கால பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் பிரதமரின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் சாமானிய மக்களை சென்றடைந்துள்ளது. நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், இல்லத்தரசிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. முத்ரா திட்டத்தின் மூலம் இந்தியா உலகிற்கு வழிகாட்டியாக உள்ளது. முத்ரா திட்டத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதில் 72 சதவீதம் பெண்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. 35 லட்சம் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் கௌரவ நிதி தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 55 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதுபோன்று மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள பயனடைந்தவர்களை சந்தித்து பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் குறித்தும் அடுத்து வரும் 11 நாட்கள் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்க வேண்டும்.
கடந்த 8 மாத கால திமுக ஆட்சியில் 80 ஆண்டு கால அளவிற்கு மக்கள் மிகுந்த கோபமாக உள்ளனர். மக்களுக்காக எந்தத் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த 517 வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. இது மட்டுமன்றி மத்திய அரசிடமும் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது.
நீட் தேர்வின் மூலமாகவே இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி, கூலித் தொழிலாளியின் மகள் என சமூகத்தின் அடித்தட்டு பகுதியைச் சேர்ந்த குடும்பங்களிலிருந்து மருத்துவக்கல்வி வாய்ப்பை பெற்று வருகின்றனர். இதைப் பார்க்கும்போது திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் 50 சதவீத மாணவர்களுக்கு அரசு கட்டணம் மட்டுமே பெற வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உண்மையான சமூகநீதியை பாரதிய ஜனதா கட்சி மட்டுமே கொண்டு செல்கிறது. ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து தமிழகத்தில் மருத்துவக்கல்வி இடங்களை 100% அதிகரிக்க பிரதமர் மோடியே காரணம் என்பதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.