‛75 சதவீதம் என்கிறார் ஸ்டாலின்... 50 சதவீதம் என்கிறார் உதயநிதி’ எத்தனை சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றியது திமுக?
முதல்வர் ஸ்டாலின் 75 சதவீதத்திற்கு மேல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறார், உதயநிதி, 50 சதவீதம் வரை நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறார். இதில் எது உண்மை என்கிற குழப்பம் தற்போது எழுந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், உள்ளாட்சி வாக்குறுதிகளை வார்டு வாரியாக வேட்பாளர்கள் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர். இது ஒருபுறமிருக்க, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியின் நிலை என்ன என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சையும், வேறு யாரும் எழுப்பவில்லை; திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரச்சாரங்கள் தான் எழுப்பியுள்ளன.
கடந்த பிப்ரவரி 6 ம் தேதி கோவை மாவட்டத்திற்கான உள்ளாட்சி வேட்பாளர்களை ஆதரித்து, காணொளி காட்சி மூலம் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது தொண்டர்களிடம் பேசிய அவர், ‛‛நீட் எதிர்ப்பில் திமுக உறுதியாக இருக்கும். நீட் தேர்வை மேலோட்டமாக பார்க்க கூடாது. முகமூடியை கழற்றிவிட்டு பார்க்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும் வெற்றி பெற்றால் தான், மக்களிடம் திட்டங்களை கொண்டு போய் சேர்க்க முடியும். ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடியும் முன்பே 75 சதவீதத்திற்கு மேல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்,’’ என்று அப்போது ஸ்டாலின் பேசியிருந்தார்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் வேலாம்பாளையத்தில் இன்று பிரச்சாரம் செய்த, திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி பேசுகையில்,
‛‛ஆட்சி அமைத்த 8 மாதத்தில் 9 கோடி கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட்டுள்ளோம், அதனால் தான் 3வது அலையை அபாயமின்றி கடந்திருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும். ஒமைக்ரானை எளிதாக வென்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம், ஸ்டாலின் ஆட்சி தான். ஒவ்வொரு அமைச்சரும், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் களத்தில் இறங்கி வேலை பார்த்ததால் தான், அது சாத்தியமானது.
அதுமட்டுமின்றி தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை கிட்டத்தட்ட 50 சதவீதத்தை நிறைவேற்றியிருக்கிறோம். அந்த உரிமையில் தான் மக்களிடம் சென்று உதயசூரியனுக்கும், திமுகவிற்கும் வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறேன். மகளிருக்கு இலவச பஸ் பயணம் தருவாக கூறினார், செய்தாரா இல்லையா? கொரோனா நிவாரணத் தொகை 4 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார், அதையும் 2 தவணையாக கொடுத்துவிட்டோம். ஆவின் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதாக கூறினார், செய்தார். பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதாக கூறி, முதற்கட்டமாக செய்து முடித்தார். இப்படி சொல்லியதை எல்லாம் செய்திருக்கிறோம். இப்படிப்பட்ட நல்லாட்சிக்கு மக்களிடத்தில் நல்ல பெயர் உள்ளது. இந்தியா முழுவதும் திரும்பிப் பார்க்கும் நல்லாட்சி நடக்கிறது,’’ என்று பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் 75 சதவீதத்திற்கு மேல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறார், உதயநிதி, 50 சதவீதம் வரை நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறார். இதில் எது உண்மை என்கிற குழப்பம் தற்போது எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்