CM MK Stalin: வாக்கிங்கில் வாக்கு சேகரிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து உற்சாகமான தேனி மக்கள்!
தேனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அந்த தொகுதியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான பரப்புரைக்காக தேனி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நடைபயிற்சியின்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இன்னும் ஒரு வாரம் மட்டுமே மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தினத்துக்கும் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையானது மிகத் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இங்கு திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் இடையே 4 முனை போட்டியானது நிலவுகிறது. இப்படியான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
தேனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் இன்று அந்த தொகுதியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். இதற்காக பொதுக்கூட்ட மேடை தயார் செய்யப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் பெரியகுளம் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்த பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். திடீரென மக்கள் கூடும் பகுதியில் முதலமைச்சரை கண்ட அப்பகுதி மக்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். பலர் முதலமைச்சரோடு செல்ஃபி எடுத்தும், அவரை நலம் விசாரிக்கவும் செய்தனர். மேலும் தேநீர் கடைக்கு சென்று அங்கு உள்ள மக்களுடன் அவர் கலந்துரையாடினார்.