பள்ளி பயிற்சி ஆசிரியர் அசத்தல்! ஆங்கிலம் கற்க QR கோடுடன் கூடிய புதிய கையேடு- மாணவர்கள் உற்சாகம்!
வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் கற்க புதுமையான கையேடு தயாரித்து வழங்கிய பயிற்சி ஆசிரியர். எப்படி சாத்தியம் ஆக்கினார்?

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் எளிமையாக ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கையேடு தயாரித்து வழங்கிய பயிற்சி ஆசிரியர் மாருதி மாலனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வலங்கைமான அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பாட பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிபவர் மாருதி மாலன். இவர் கும்பகோணம் கே.எஸ்.கே கல்வியியல் கல்லூரியில் பி.எட்., பயின்று வருகிறார். இந்த நிலையில் மாணவர்கள் எளிமையாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவியாக பயிற்சி கையேடு ஒன்றை தயாரித்து வழங்கியுள்ளார்.
உரிய தமிழ் விளக்கங்களுடன் வினைச் சொற்கள், எளிய வாக்கியங்கள்
வினைச் சொற்கள், எளிமையான வாக்கியங்கள் ஆகியவை இந்தக் கையேட்டில் உரிய தமிழ் விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. புது முயற்சியாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கையேட்டில் கியூ.ஆர்.கோடு தனியாக இடம்பெறச் செய்துள்ளார். இதை ஸ்கேன் செய்தால், ஆங்கில பயிற்சிக்கான வீடியோவையும் பார்க்க முடியும்.
இது குறித்து பயிற்சி ஆசிரியர் மாருதிமாலன் கூறும்போது, ’’தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தி வரும் ’திறன்’ இயக்கத்திற்கு, இந்தக் கையேடு கூடுதலாக உதவியாக இருக்கும், க்யூ .ஆர்.கோடு ஸ்கேன் செய்து பார்ப்பது மாணவர்களுக்கு பிடிக்கும். எனவே இந்த கையேட்டில் க்யூ.ஆர்.கோடு சேர்க்கப்பட்டுள்ளது. இதுபோல மேலும் சில கையேடுகள் தயாரித்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அது என்ன திறன் திட்டம்?
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையால் 'திறன்' என்ற திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப் படுகிறது. இந்த திட்டம் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. முக்கியமாக தமிழ், ஆங்கிலம், வாசித்தல், எழுதுதல் போன்றவற்றிற்கு சிறப்பு பயிற்சி அளிக்கப் படுகிறது. கணிதத்தில் அடிப்படைக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், உள்ளிட்ட அடிப்படை திறன்களுக்கு கவனம் செலுத்தப் படுகிறது. அந்த வகையில் இந்த கையேடு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தக் கையேட்டினை தயாரித்து வழங்கிய பயிற்சி ஆசிரியர் மாருதி மாலனை தலைமை ஆசிரியர் நாவளவன், வழிகாட்டி ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.






















