மேலும் அறிய
Advertisement
வழிகாட்டும் தமிழகப் பெண்கள்.. ஜெயித்துக்காட்டிய மகளிர் படை
TNPSC குருப் 1 தேர்வில் வரலாறு காணாத வகையில், கடும் போட்டியிலும் தமிழ்நாட்டு பெண்கள் சாதனை படைத்துள்ளனர்
அண்மைக்கால வரலாறு காணாத வகையில், தமிழகப் பெண்கள், கடும் போட்டியும் சவாலும் நிறைந்த குரூப் 1 தேர்வில் சாதனைப் புரிந்திருக்கிறார்கள். இதற்குமுன், பல போட்டித் தேர்வுகளில், முதலிடம் பிடிப்பது முதல் அதிக முன்னணி இடங்களைப் பெறுவது போன்ற சாதனைகளைப் பெண்கள் செய்திருக்கிறார்கள். வரலாற்றிலும் இடம்பெற்று இருக்கிறார்கள்.
- ஆனால், இந்த முறை ஒரு புதிய அத்தியாயத்தையே போட்டித் தேர்வுகளில் தமிழகப் பெண்கள் ஆரம்பித்து வைத்துள்ளனர். அதாவது, தற்போது வெளியான குரூப் 1 தேர்வுகளில் தேர்வானவர்களின் இறுதிப் பட்டியலில், தேர்வான 66 இடங்களில் 57 பேர் பெண்கள் என்பதுதான் அந்த புதிய மைல்கல். ஒரு சாதனை அளவீடாகப் பெண்களின் ஆதிக்கம் இந்தத் தேர்வுப்பட்டியலில் பதிந்து இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.
- ஏற்கெனவே, இதற்கு முந்தைய குரூப் தேர்வுகளின் இறுதிப் பட்டியலில் கூட, பெண்கள் ஆதிக்கமே அதிகம் இருந்துள்ளது. ஆனால், இந்த முறை, கிட்டத்தட்ட 86 சதவீதம் என்பதுதான் புதிய உச்சம் எனக் கூறுகிறார்கள் போட்டித் தேர்வு ஆலோசகர்கள்.
- பெண்களுக்கு ஏற்கெனவே, சிறப்பு ஒதுக்கீடுகள் பல இருப்பதால், பெண்களுக்குத் தேவையின்றி முக்கியத்துவம் கொடுப்பது, ஆண்களுக்கு எதிரான போக்காகிவிடும் என்றுகூட ஒருபக்கம் வாதங்களும், விவாதங்களும் பெரிதாகி வருகின்றன. பெண்களுக்கான ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படாததால், ஆண்களுக்கான வாய்ப்புகள் பறிபோகின்றன என்ற பிரச்சினை எழுப்பப்பட்டு, இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் இருக்கின்றன என ஒருதரப்பினரின் ஆதங்கத்தை ABP நாடு செய்தியாளரிடம் பதிவு செய்தார் போட்டித்தேர்வு ஆலோசகர் ரேடியன் ராஜபூபதி.
- ஆனால், பெண்கள் ஜெயித்து வருவதில், தமிழகம் முன்னணியில் இருக்கிறது என்பதைத்தான் தற்போது குருப் 1 இறுதித் தேர்வு பட்டியல் கண்கூடாக எடுத்துக்காட்டுகிறது என மற்றொரு பார்வையில் தம் கருத்தை பதிவு செய்கிறார் போட்டித்தேர்வு பயிற்சியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
- குரூப் 1 தேர்வு என்பது கிட்டத்தட்ட, மத்திய அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கு இணையான மாநில அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வு. இந்தத் தேர்வில் வெற்றிப்பெறுவோர் துணை ஆட்சியர்கள், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள், வணிக வரித்துறை உதவி ஆணையர்கள் என்பது போன்ற தமிழக அரசு இயந்திரத்தின் பல முக்கிய பதவிகளை வகிக்கப் போகிறார்கள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தேர்வில்தான்,100 சதவீதத்தில் கிட்டத்தட்ட 86 சதவீதம் பெண்கள் வெற்றிப்பெற்று, குருப் 1 தேர்வில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.
- ஒரு பக்கத்தில், உயர்நிலைப் பள்ளி மாணவிகளின் தற்கொலைகள் குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி, பெரும் அச்சத்தை ஏற்படுத்தின. கல்விச்சுமை, குடும்பச்சுமை, மனச்சுமை என பல்வேறு குழப்பங்களால், இந்த இளம் தளிர்கள் உயிரை மாய்த்துக் கொண்டது, இந்தத் தலைமுறை இளம்பெண்களின் எதிர்காலம் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியது. இந்தச் சூழலில்தான், தற்போது குருப் 1 தேர்வில், பெண்கள் அசத்தியுள்ளனர் என்ற தகவல் நம்பிக்கை தருகிறது.
- குரூப் 1 தேர்வில், 66 இடங்களில் 57 பேர் பெண்கள் என்பதன் மூலம் இன்றைய தமிழக இளம்பெண்கள், உலகத்திற்கே அச்சாணியாக, இந்தியாவிற்கே வழிகாட்டியாக சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது என்றும், பெண்கள் முன்னேற்றத்தில் தமிழகம் முன்னேறி வருகிறது என்பதில் இது ஒரு புதிய மைல்கல் என ABP நாடு செய்தியாளரிடம் தெரிவித்தார் போட்டித்தேர்வு பயிற்சியாளரும் ஆலோசகருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
- பெண்களின் இந்த அசுர வேகம், மற்ற இளம் பெண்களுக்கு, குறிப்பாக, உயர்நிலை வகுப்பில் உள்ள மாணவிகளுக்கு பெரும் உந்துகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். அதுபோலத்தான், உங்களால் முடியும் என்று நினைத்துவிட்டால், நிச்சயம் செய்துக்காட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வந்த உதாரணப் பெண்கள், தற்போது எங்கும் நிறைய ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களைப் பாருங்கள், உங்கள் எதிர்காலத்தை ஜெயிக்கத் தயாராகுங்கள். தற்கொலைப் போன்ற கெடு எண்ணங்களை துரத்தி அடியுங்கள்.
- பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக, சிறப்பு இட ஒதுக்கீடாக அரசுப் பணிகளில், 30 சதவீதம் பெண்களுக்கு தமிழக அரசு ஏற்கெனவே கொடுத்திருக்கிறது. இவையெல்லாம், தமிழகப் பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, தற்கொலைப் போன்ற கெடு எண்ணத்தைக் கொள்வோர் உணர வேண்டும். நிச்சயம், நீங்களும் பெண்களின் வெற்றி அத்தியாயத்தில் ஓர் அங்கமாக முடியும் என மனதில் நிறுத்துங்கள். ஏனெனில், பெண்கள் முன்னேற்றத்தில் தமிழகம் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆரம்பித்துவிட்டது என்பதைத்தான் இந்த குரூப் 1 தேர்வு வெற்றி சாதனை எடுத்துக் காட்டுகிறது.
- நான் அறிந்தவரை, ஏற்கெனவே, பத்தாம்வகுப்பு, பிளஸ் டூ உள்ளிட்ட பள்ளித்தேர்வுகளில் எல்லாம், பெண்களுக்குத்தான் எப்போதுமே முதலிடம். தற்போது போட்டித் தேர்வுகளிலும் பெண்கள் முன்னணி இடத்திற்கு வருவது, ஆண்களுக்குப் பெரும் சவாலைத்தரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
- மாணவிகள், மாணவர்கள் என இருபாலாருக்கும் இந்த உலகில் போதிய வாய்ப்புகள் இருக்கின்றன. யார், எதை, எப்படி பயன்படுத்துகிறார் என்பதுதான் முக்கியம். ஆண் என்ன, பெண் என்ன, வெற்றியாளர்கள் யாராக இருந்தாலும், சிறந்தவராக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். அதை நோக்கி முன்னேறுவோம்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்
உலகம்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion