TNPSC group 4 : இன்று குரூப்4 தேர்வு! என்னென்ன விதிமுறைகள், கட்டுப்பாடுகள்? முழு விவரம் உள்ளே!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறுகிறது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மொத்தமுள்ள 7,382 காலி இடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்படவுள்ளது என்று கடந்த மார்ச் 29ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இதில் 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மார்ச் 30 முதல் ஏப்ரல் 28 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.5 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில், பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் இன்று நடைபெறுகின்றது. சென்னையில் மட்டும் 503 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இம்மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் இந்த தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக 534 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இத்தேர்வுக்குச் செல்வதற்காக சிறப்புப் பேருந்துகளை இயக்குவதாக போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. அதன்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் அறிவுறுத்தல்படி மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்று சிறப்புப் பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, தேர்வு மையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சிறப்புப் பேருந்துகள் முறையாக நின்று செல்ல ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள், இனி தேர்வு முடிந்தபின் தனியாகப் பிரிக்கப்படும் என்றும், விடைத்தாள் டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்யப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. விடைத்தாள்களைக் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும் என்றும் அதே மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முறை எப்படி?
முதல் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் பெற்றவர்களின் தேர்வுத்தாள் மட்டுமே திருத்தப்படும். மொத்தம் 90 மதிப்பெண்களைக் குறைந்தபட்சமாகத் தேர்வர்கள் பெற வேண்டும். அவர்களின் பெயர்கள் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும்.
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் :
- தேர்வர்கள் 8.30 மணிக்கு வர வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 8.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
- தேர்வர்கள் 12.45 மணி வரை தேர்வறைக்குள் இருக்க வேண்டும்.
- முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி அளிக்கப்படுகிறது.
- தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- அதிகாரிகள் சரி பார்க்கும்போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி, முகத்தைக் காட்ட வேண்டும்.
- செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை.
- கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
- சமூக இடைவெளி, சுய பாதுகாப்பு, சுத்தம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
- தெளிவாகத் தெரியும் பாட்டிலில் சொந்தமாக சானிட்டைசரைத் தேர்வர்கள் எடுத்துக்கொண்டு வர வேண்டும்.
- தேர்வுக்குப் பயன்படுத்தும் சொந்த எழுது பொருட்களை, மற்ற தேர்வர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
- முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை
- அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும்.
- டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.
- ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள், இனி தேர்வு முடிந்தபின் தனியாகப் பிரிக்கப்படும்.