TN Board Class 10 Re Exam: 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் தேர்வா? - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் விளக்கம்..
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு என்று தகவல் பரப்பி, அவர்களை மனதளவில் பாதிக்கும் செயலில் யாரும் ஈடுபடவேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 9,10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பம் அடைந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் நமது ABP நாடுக்கு விளக்கமளித்துள்ளார். அதில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கிய அரசின் உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மாணவர்களுக்கு மதிப்பெண்ணை உயர்த்த மாநில அளவில் பொதுவான தேர்வு என்பது முழுக்க முழுக்க தவறான தகவலாகும்” என்று கூறினார். மேலும், 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது முடிந்துபோன விவகாரம் என்றும், அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று பொய் தகவலைப் பரப்பி மாணவர்களை மனரீதியாக பாதிக்கும் செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்றால் போடப்பட்ட ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தவிர அனைவரும் தேர்வின்றி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதில், 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, கொரோனா தொற்று குறையாததால் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அதன்பிறகு, கொரோனா தொற்று குறைய தொடங்கியதால், 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், 12-ஆம் வகுப்பை தவிர இந்த ஆண்டும் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி ஆல்பாஸ் என்று முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது எனக்கூறி, வழக்கையும் முடித்து வைத்தது.
மேலும், 11-ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் தங்களுக்கான குரூப்பை தேர்வு செய்வதற்கு தமிழக அரசு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடவேண்டும் என்றும், 11-ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களின் சேர்க்கைக்கு தகுதியை கண்டறிய 10-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று உயர்நீதிமன்றம் கூறியது.