காஞ்சிபுரத்தில் நாளை தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கக்கூடாது: ஆட்சியர் உத்தரவு
பள்ளியில் தண்ணீர் தேங்காவிட்டாலும்கூட, கல்வி நிலையங்கள் செயல்படக் கூடாது என்றும் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (டிச.6) தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கக்கூடாது என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளையும் (டிச.6) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவில் பெய்த கன மழையால் தேங்கியுள்ள வெள்ள நீர், பல இடங்களில் இன்னும் வடியாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கன மழை காரணமாக கடந்த இரண்டு நாட்களும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளையும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கக்கூடாது என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளியில் தண்ணீர் தேங்காவிட்டாலும்கூட, கல்வி நிலையங்கள் செயல்படக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
தவறும் நிர்வாகத்தின் மேல் நடவடிக்கை
பள்ளி, கல்லூரி மாணவர்களை வண்ண ஆடைகள் அணிந்து வரச் சொல்லி வற்புறுத்தினாலோ, தேர்வு எழுத வருமாறு கூறினாலோ சம்பந்தப்பட்ட கல்வி நிலையத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல சிறப்பு வகுப்புகள் எதையும் நடத்தக்கூடாது. தவறும் நிர்வாகத்தின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத பெரு மழை
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை 24 மணி நேரத்துக்கும் மேலாக, கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
சென்னையின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ., காட்டுப்பாக்கம் - 29 செ.மீ., நுங்கம்பாக்கம் - 24 செ.மீ., மீனம்பாக்கம் - 19 செ.மீ. மழை பெய்துள்ளது.






















