மேலும் அறிய
Maharastra NEET scam: நீட் மோசடிகளின் கூடாரம்... - பா.ம.க. ராமதாஸ் கண்டன அறிக்கை!
மகாராஷ்டிரா நீட் மோசடியை அடுத்து பல்வேறு தலைவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
![Maharastra NEET scam: நீட் மோசடிகளின் கூடாரம்... - பா.ம.க. ராமதாஸ் கண்டன அறிக்கை! PMK leader Ramadoss condemned NEET scam issue of Maharastra Maharastra NEET scam: நீட் மோசடிகளின் கூடாரம்... - பா.ம.க. ராமதாஸ் கண்டன அறிக்கை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/16/1f8e794e1c210aad374497353d9cba5c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராமதாஸ்
மகாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதுவதில் மோசடி நிகழ்ந்ததை அடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களிடம் நீட் தேர்வை ரத்து செய்யும் கோரிக்கை தொடர்ந்து வலுத்துவருகிறது. இந்த வரிசையி பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் நீட் மோசடிகளின் கூடாரம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
![Maharastra NEET scam: நீட் மோசடிகளின் கூடாரம்... - பா.ம.க. ராமதாஸ் கண்டன அறிக்கை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/14/226aac57d437119a9cf8ff832b8b0a6e_original.png)
"மராட்டிய மாநிலத்தை மையமாக வைத்து தில்லியிலும், ஜார்கண்டிலும் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடிகள் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பேரதிர்ச்சி அளிக்கின்றன. மருத்துவ மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் நீட் தேர்வே மோசடிகளின் கூடாரமாக மாறியிருப்பது மாணவர்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.
2021-ஆம் கல்வியாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக கடந்த 12-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடிகளை செய்ததாகக் கூறி, மராட்டிய மாநிலம் நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி மற்றும் கல்வி வழிகாட்டுதல் நிறுவனம் மீது நடுவண் புலனாய்வுப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர். ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால் மாணவர்களுக்கு மாற்றாக வேறு ஆட்களை நீட் எழுத வைத்து, நாட்டின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி தில்லியிலும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் 5 மாணவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்தது என்பது தான் அந்த நிறுவனம் மீது கூறப்படும் குற்றச்சாட்டு ஆகும். இதற்காக பல வழிகளில், பல்வேறு நிலைகளில் போலிச் சான்றிதல், போலி அடையாள அட்டை உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ளன.
இந்தியாவில் 2010-ஆம் ஆண்டில் நீட் கொண்டு வரப்பட்ட போது அதற்காக கூறப்பட்ட காரணங்களில் மிகவும் முக்கியமானது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவது, மருத்துவக் கல்வியில் வணிக நோக்கத்தை ஒழிப்பது ஆகியவை தான். நீட் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கையில் மோசடி தடுக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, நீட் தேர்விலேயே தொடர் மோசடிகள் நடைபெற்று வருவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இத்தகைய மோசடிகள் நீட் தேர்வு மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகளின் மீதான மாணவர்களின் நம்பிக்கையை முற்றாக தகர்த்து விட்டன.
நீட் தேர்வில் முறைகேடுகளும், மோசடிகளும் நடப்பது இது முதல்முறையல்ல. நடப்பாண்டிற்கான நீட் தேர்வு வினாத்தாள்கள் ஜெய்ப்பூரில் ரூ.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களிலும் நீட் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே கசிந்துள்ளன. அதேபோல், ஆள் மாறாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் நீட் தேர்வில் 10 மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் படித்த அவர்கள் பெயரில் பிகார் உள்ளிட்ட வட மாநில மையங்களில் வேறு ஆட்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதற்காக ஒவ்வொருவர் சார்பிலும் ரூ.25 லட்சம் கையூட்டு தரப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதப்பட்டு, அதன் முடிவாகி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வரை இந்த மோசடி கண்டுபிடிக்கப்படவில்லை. தேனி மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் மோசடியாக சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் இந்த மோசடி வெளியில் வந்தது. 2018-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் இதே வழியில் சேர்ந்தது இரு ஆண்டுகள் கழித்து தான் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களைப் போல மோசடியாக மாணவர் சேர்க்கை இடத்தைக் கைப்பற்றி இன்னும் எத்தனைப் பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் ஐயங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.
நீட் தேர்வு மோசடிகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை என்பது இன்னுமொரு வேதனை ஆகும். தமிழ்நாட்டில் நடைபெற்ற நீட் ஆள்மாறாட்ட மோசடியில் உண்மையான மாணவர்களுக்கு பதிலியாக தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட பிறகும் கூட அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது கூட தில்லி, ராஞ்சியில் ஆள் மாறாட்டம் செய்தவர்கள் யார்? என்ற விவரம் வெளியிடப்படவில்லை. பதிலியாக தேர்வு எழுதவிருந்தவர்கள் தேர்வுக்கே வரவில்லை என்று கூறப்படுகிறது. இது அவர்களை காப்பாற்றும் முயற்சியா? என்பது தெரியவில்லை. நீட் மோசடி செய்பவர்களுக்கு அசைக்க முடியாத ஆதரவு இருக்கிறது என்பதையே இந்த தகவல்கள் காட்டுகின்றன.
இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் ஐயங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. மருத்துவக் கல்வியியின் தரத்தை உயர்த்த வேண்டும்; மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுக்க வேண்டும் ஆகிய இரு உன்னத நோக்கங்களை நிறைவேற்ற நீட் தவறி விட்டது. இத்தகைய சூழலில் மோசடிகளின் கூடாரமாக நீட் உருவெடுத்திருப்பது தேர்வு சார்ந்த மோசடிகள் அதிகரிக்கவும், மருத்துவக் கல்வியின் தரம் குறையவும் தான் வழி வகுக்கும். எனவே, நடப்பாண்டு முதலே நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்; அதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion