கெத்து காட்டும் தமிழக கல்வி... இதுக்கெல்லாம் விதை போட்டது (எம்.ஜி)யார் தெரியுமா.?
தமிழகத்தில் கல்வி சிறந்து விளங்குகிறது என்றால் இதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் போட்ட விதை தான். பள்ளி கல்வி முதல் உயர்கல்வி வரை பல்வேறு திட்டங்களை அறிவித்து மாணவர்களை படிக்க ஊக்குவித்தார் என்றால் யாராலும் மறுக்க முடியாது.

தமிழகத்தில் கல்வி வளர்ச்சி
தமிழகம் இந்தியாவில் கல்வித்துறையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. மற்ற மாநிலங்களில் ஒப்பிடுகையில் தமிழகத்தின் எழுத்தறிவு விகிதம் உச்சத்தில் உள்ளது. மேலும் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதமும் அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களில் +2 தேர்ச்சி பெற்றோரில் 75% உயர்கல்வியில் சேர்ந்து வருகிறார்கள்.எனவே கல்விக்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்றவை மாணவர் சேர்க்கையை அதிகரித்துள்ளன. இருந்த போதும் 1970 களில் கல்விக்காக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் போட்ட விதை தான் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.
தமிழக கல்விக்கு வித்திட்டவர் எம்ஜிஆர்
1970 ஆம் ஆண்டுகளில் டாக்டர், வழக்கறிஞர் படிப்பை போல் இன்ஜினியரிங் படிப்பும் கொடி கட்டி பறந்தது. இன்ஜினியரிங் படிப்பு படித்தால் அது ஒரு கெத்தாகவே இருந்து வந்தது. ஆனால் இன்று இன்ஜினியரிங் பட்டதாரிகள் இல்லாத வீடுகளே இல்லாத அளவிற்கு பொறியியல் பட்டதாரிகள் அதிகமாகியுள்ளனர். இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்தது. எம்ஜிஆர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஆட்சிக்கு வந்த உடனே 1978-ல் அண்ணா பல்கலைக் கழகத்தை தொடங்கினார்.
அடுத்ததாக பொறியியல் கல்லூரி தொடங்க அரசிடம் நிதி வசதி குறைவாக இருந்ததால் பொறியியல் கல்லூரிகள் தனியாருக்கும் அனுமதி தந்தது அசத்தினார். அதிலும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசாங்க கோட்டா என பாதியிடங்களை பெற்று ஏழை எளிய மாணவர்களும் பொறியல் படிப்புகளை பெற வழிவகை ஏற்படுத்தி கொடுத்தார். 100 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் வெறும் 4 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா என அடுத்தடுத்து புதியதாக பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டது. இதே போல தமிழகத்தில் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கியது எம்ஜிஆர் ஆட்சி தான்.
பள்ளிகல்வி முதல் உயர்கல்வி வரை
உயர்கல்வி மட்டுமல்ல, அடிப்படையான, பள்ளிக் கல்வியை அடுத்த தளத்திற்கு வேகமாக கொண்டு போனதில் எம்ஜிஆர் ஆட்சியின் பங்கு முக்கியமானது. ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பில் கூட மாணவர்களை ஃ பெயிலாக்கப்பட்டனர். இதனால் பல ஆயிரம் மாணவர்கள் கல்வியை நிறுத்தினார்கள். ஆடு, மாடு மேய்க்க செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஏதாவது கடைக்கு வேலைக்குப் போகத்தான் நீ லாயக்கு என்று நகர்புறத்தில் அனுப்பினார்கள் பெற்றோர். இதனையெல்லாம் உடைத்தெறிந்து ஐந்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் செய்தார்.
அன்றைய நாளில் பிள்ளைகளை முட்டாளாக்க எம்ஜிஆர் வழி செய்கிறார் என்று எல்லோருமே கிண்டல் அடித்தார்கள். ஆரம்பப்பள்ளியில் ஃபெயில் இல்லை என்கிற விஷயத்தால் மாணவ மாணவியர் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார்கள். போகப்போக அவர்கள் அறிவு நன்றாக பிக்கப் ஆகி நடுநிலை உயர்நிலை மேல்நிலை என கல்விப் பயணம் தடையின்றி போனது. இதுமட்டுமில்லாமல் பள்ளிகளில் வயிறார சத்துணவு, இலவச பாடப்புத்தகங்கள் மட்டுமல்ல பல்பொடி உட்பட மாணவர்களுக்கு பல்வேறு விஷயங்களை கிடைக்கச் செய்தவர் எம்ஜிஆர்.
மாணவர்களுக்கான சலுகைகள்
சாதி பாகுபாடு பார்க்கப்படும் சமுதாயத்தில் அனைத்து சமூக குழந்தைகளுக்கும் ஆசிரியர்களைக் கொண்டே இலவச காலணி அணிவிக்க செய்து அழகு பார்த்தவர் எம்ஜிஆர்.10வது முடித்திருந்தால் மாதம் 50 ரூபாய், +2 முடித்து இருந்தால் 100 , டிகிரி முடித்திருந்தால் 250 ரூபாய். படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை தேட உதவும் என்று அஞ்சலகங்கள் மூலம் மாதா மாதம் பணம் வழங்கியது எம்ஜிஆரின் ஆட்சி. தமிழக கல்வித்துறை வரலாற்றில், மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவர் எம்ஜிஆர் என்றால் யாராலும மறுக்க முடியாது.





















