![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Body Shaming : உருவத்தை வெச்சு கேலியா?! பள்ளிகளில் தொடங்க இருக்கும் புதிய விழிப்புணர்வு பாடம்.. அரசு அறிவிப்பு..
“அத்தகைய பாகுபாடுகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாம் உருவ கேலியை நிறுத்த வேண்டும். நவீன மனிதர்களாக இருப்போம்,” என்று அமைச்சர் கூறினார்.
![Body Shaming : உருவத்தை வெச்சு கேலியா?! பள்ளிகளில் தொடங்க இருக்கும் புதிய விழிப்புணர்வு பாடம்.. அரசு அறிவிப்பு.. Kerala to include awareness on body shaming in school curriculum Education min Body Shaming : உருவத்தை வெச்சு கேலியா?! பள்ளிகளில் தொடங்க இருக்கும் புதிய விழிப்புணர்வு பாடம்.. அரசு அறிவிப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/15/8c24d08d85c8ba3f1ea992ceac93af321668488575724109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாணவர்களை விழிப்பூட்டுவதற்காக பள்ளி பாடத்திட்டத்தில் உருவ கேலிக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பாடங்கள் சேர்க்கப்படும் என கேரள அரசு திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
உருவக்கேலி
உருவக்கேலி என்பது நமது பேச்சில் பல காலங்களாக இருந்து வந்தாலும், சமூக ஊடகங்கள் வந்த பிறகு அது தாக்குதல்களாக உருவெடுத்து பலரை எளிதில் காயப்படுத்தும் ஆயுதமாக மாறிவிட்டது. அதுமட்டுமின்றி அவை நாம் நமது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் நகைச்சுவையாக பயன்படுத்தும் சொற்களிலும் சேர்ந்துவிட்டன. பல சினிமாக்களும் காமெடி என்று அதனை ஊக்குவிக்கின்றன. தற்போது ஓரளவு குறைந்துவிட்டாலும் இன்றுவரை மக்களிடம் நீங்காமல் இருப்பதற்கு காரணம் சினிமாக்களில் வரும் வசனங்களும்தான். அதனை குழந்தைகளிடம் இருந்து மாற்றினால் தான் அடுத்த தலைமுறை சமுதாயம் மாறும் என்பதற்காக கேரள அரசு ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
உருவக்கேலி மோசமானது..
உருவக்கேலி செய்வது ஒரு கேவலமான செயல் என்றும், இதனால் பாதிக்கப்பட்ட சிலர் சுய மதிப்பை இழந்துள்ளனர் என்றும் மாநில கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி தெரிவித்துள்ளார். பலர் உருவத்தை கேலி செய்யும் இழிவான கருத்துக்களை கிண்டல் தொனியுடன் தனது சுற்றத்தாரிடம் உரிமையுடன் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அதன் தீய விளைவுகளை அவர்கள் அறிவதில்லை என்றார். "எந்த விளக்கம் கொடுத்தாலும், உருவ கேலி சொற்றொடர்கள் மோசமானவை" என்று அவர் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கருத்து
சமீபத்தில் ஒருவர் தனது புகைப்படத்தின் கீழே கமென்டில் தனது வயிற்றைக் குறைக்குமாறு கேட்டுக்கொண்டதாக அமைச்சர் கூறினார். "இது நம் சமூகத்தில் பல்வேறு நிலைகளில் நடக்கிறது, இருப்பினும் இது அன்பாகவும் இனிமையாகவும் சொல்லப்படுகிறது என்கிற மாயப்போர்வை உள்ளது. என் வயிற்றை குறைக்க சொன்னவரிடம் உருவ கேலி ஒரு கேவலமான செயல் என்று பதிலளித்தேன். உருவ கேலி காரணமாக தன்னம்பிக்கையை இழந்த பலர் உள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "இதை நாம் முடித்துவைத்தாக வேண்டும். நம் பேச்சும், சுற்றமும் நவீனமாக இருக்கட்டும், அதற்கான முயற்சியை நாம் எடுக்க வேண்டும்” என்று அந்த பதிவில் கூறியுள்ளார். தனது நிறத்தின் காரணமாக பாகுபாட்டை எதிர்கொண்ட தனது நண்பரின் சகோதரர் பாதிக்கப்பட்டது என பல சம்பவங்களை அமைச்சர் மேற்கோள் காட்டினார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் தனது பள்ளியை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். “அத்தகைய பாகுபாடுகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நான் மீண்டும் சொல்கிறேன், நாம் உருவ கேலியை நிறுத்த வேண்டும். நவீன மனிதர்களாக இருப்போம், ”என்று அவர் தெரிவித்தார்.
இங்கு நிறம், செல்வம் அல்லது அளவு விஷயம் அல்ல, ஆனால் நல்ல இதயம் தான் முக்கியம். "அத்தகைய விழிப்புணர்வை எவ்வாறு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவது என்பதை குறித்து நாம் விவாதிக்கலாம். ஆசிரியர்களின் பயிற்சித் திட்டங்களின்போது இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் ஆலோசிப்போம்,” என்று அவர் மேலும் கூறினார், அரசாங்கம் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)