ஜேஇஇ தேர்வில் அகில இந்திய தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து நெல்லை மாணவர் சாதனை
எனக்கு செமி கண்டக்டர் துறையில் பொறியாளராக வர வேண்டும் என்பதே எனது லட்சியம், அதனால் இந்த தேர்வு எழுதினேன், அதில் 300 மதிப்பெண் எடுத்துள்ளேன். எனக்கே புரியாத அளவில் சந்தோசத்தில் உள்ளேன்.
மத்திய அரசின் பொறியியல் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் தகுதித்தேர்வான ஜே.இ.இ நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேரவும், மேலும் பல தனியார் பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்புகளில் சேரவும் ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என 2 பிரிவுகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ஐடி, ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேரலாம். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஐஐடி கல்லூரிகளில் சேரலாம். இந்தியாவில் உள்ள பல பெரிய பல்கலைக்கழகங்களும் இந்த தேர்வின் அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன.
நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் தேர்வுக்கு 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி 24, 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1, ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்காக பதிவு செய்த 12,21,615 பேரில் 11,70,036 பேர் தேர்வெழுதினர். இந்தநிலையில் முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் இம்முறை மொத்தம் 23 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுளனர். இந்த நிலையில் தேசிய முகமை தேர்வு நிறுவனம் நடத்திய ஜேஇஇ முதன்மை தேர்வில் பாளையங்கோட்டை புஸ்பலாதா வித்யா மந்திர் மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய தரவரிசை பட்டியலில் (300/300) மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்ற 23 மாணவர்களில் இவர் ஒருவரே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஸ்ரீகாந்த் தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தில் பொறியாளராகவும், அம்மா தபால் துறையில் உதவியாளராக இருந்து விருப்ப பணி ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாணவர் கூறும் பொழுது, “நான் 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன், எனக்கு செமி கண்டக்டர் துறையில் பொறியாளராக வர வேண்டும் என்பதே எனது லட்சியம், அதனால் இந்த தேர்வு எழுதினேன், அதில் 300 மதிப்பெண் எடுத்துள்ளேன். எனக்கே புரியாத அளவில் சந்தோசத்தில் உள்ளேன். இதற்கு எனது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தாய் தந்தைக்கு நன்றி. நான் இந்த தேர்வில் வெற்றி பெற்றதற்கு தமிழக கல்வித் துறை அமைச்சர் தொலை பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார், இது எனக்கு சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது” என்று முகுந்த் பிரதீஷ் தெரிவித்தார்
பள்ளியின் தாளாளர் புஷ்பலாதா பூரணம் கூறும் பொழுது, “அகில இந்திய அளவில் நடைபெற்ற ஜேஇஇ தேர்வில் முழு மதிப்பெண் எடுத்த 23 மாணவர்களில் தமிழகத்தில் முகுந்த் முதலிடம் பிடித்து எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது அதுவும் நெல்லையில் இருந்து எங்கள் மாணவன் முதல் மதிப்பெண் எடுத்திருப்பது எங்களுக்கு பெருமை” என்றும் தெரிவித்தார்