ARTSENS: யார் வேண்டுமானாலும் இதயநோய்களை முன்கூட்டியே அறியலாம்; ஐஐடி மெட்ராஸின் பரிசோதனை கருவி அறிமுகம்
ஐஐடி சென்னை விஞ்ஞானிகள், இதயநோய்களுக்கான ஆரம்பகட்ட பரிசோதனையை வழங்க உடல் செல்- நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத புதுமையான சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
ஐஐடி சென்னை விஞ்ஞானிகள், ரத்த நாளங்களின் ஆரோக்கியம் மற்றும் வயதை மதிப்பீடு செய்வதற்கும், அதன்மூலம் இதயநோய்களுக்கான ஆரம்பகட்ட பரிசோதனையை வழங்குவதற்கும், உடல் செல்- நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத புதுமையான சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
ஆர்ட்சென்ஸ் (ARTSENS®) என்று அழைக்கப்படும் இக்கருவி, நிபுணர்கள் அல்லாதவர்களும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ரத்தநாள ஆரோக்கியத்தை மதிப்பிடவும் கணிக்கவும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இமேஜிங் அல்லாத, கணினித் தளம் மூலம் இயக்கப்படும் தொழில்நுட்பத்தை ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள சுகாதாரத் தொழில்நுட்ப புத்தாக்க மையம் உருவாக்கியுள்ளது.
இந்தக் கருவியைக் கொண்டு 5,000-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பரிசோதனை செய்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவில் ஐந்து பயன்பாட்டுக் காப்புரிமைகளைப் பெற்றுள்ள இத்தொழில்நுட்பம், 10 வடிவமைப்புக் காப்புரிமைகளுடன், 28 காப்புரிமைகளைப் பெறுவதற்காக வெவ்வேறு அதிகார வரம்புகளில் காத்திருக்கிறது. இதன்மூலம் பிற்காலத்தில் வரக்கூடிய இதய நோய்களுக்கான முன்னெச்சரிக்கை மதிப்பீடுகளைப் பெற முடியும்.
அறிவியல் ஆய்வு வெளியீடுகள்
விரிவான சோதனைக்குப் பிறகு தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வணிகப்படுத்துதலுக்கு இக்கருவி தயார் நிலையில் உள்ளது. ஆண்டொன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான ரத்தநாள சோதனை நடத்துவதற்கு இதனைப் பயன்படுத்த வேண்டும் என ஐஐடி மெட்ராஸ் குழுவினர் விரும்புகின்றனர். இக்கருவியின் தொழில்நுட்பம் மற்றும் களஆய்வு முடிவுகள் 100-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வு வெளியீடுகளாக ஏற்கனவே வெளியாகி உள்ளன.
சமீபத்தில் வெளியாகி உள்ள ஆய்வுக் கட்டுரைகளை https://journals.lww.com/jhypertension/Citation/2022/08000/Image_free_ultrasound_for_local_and_regional.12.aspx என்னும் இணைப்பில் காணலாம்.
ஐஐடி மெட்ராஸ்-ன் மின் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜெயராஜ் ஜோசப் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 'ஜர்னல் ஆஃப் ஹைபர்டென்ஷன்' இதழின் கட்டுரையை எச்டிஜசி- ஐஐடி மெட்ராஸ் முன்னணி ஆராய்ச்சி விஞ்ஞானியான டாக்டர் பி.எம்.நபீல், ஐஐடி மெட்ராஸ் மின் பொறியியல் துறையில் பிஎச்டி பயிலும் வி.ராஜ் கிரண் மற்றும் டாக்டர் ஜெயராஜ் ஜோசப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
இறப்புக்கான முக்கிய காரணம்
சிகிச்சை மற்றும் நடைமுறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளபோதும், இதயம், ரத்தநாளங்கள் தொடர்பான நோய்கள் உலகம் முழுவதும் இறப்புக்கான முக்கிய காரணமாக நீடித்து வருகின்றன. எனவே ஆரம்ப கட்டத்திலேயே கோளாறைக் கண்டறிந்து சரியான நேரத்தில் சரிசெய்வது அவசியமாகும்.
ஆர்ட்சென்ஸ்-ன் பிரத்யேக அம்சங்களை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் மின் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜெயராஜ் ஜோசப், ''ரத்தநாள ஆரோச்கியத்தின் நம்பகமான மதிப்பீட்டைக் கண்டறிய ரத்த நாளங்களின் சுவரில் நேரடியாக அளவிட வேண்டும். மாறாக தோலின் மேற்பரப்பில் அளவிடக் கூடாது. நோய் மற்றும் முதுமை காரணமாக ரத்தநாளச் சுவரில் ஏற்படும் மூலக்கூறு மற்றும் புரதநிலை மாற்றங்களின் விளைவை எவ்விதத்திலும் ஊடுருவாத, துல்லியமான முறையில் ஆர்ட்ச்சென்ஸ் கருவி மூலம் அளவிட முடியும்'' என்று தெரிவித்தார்.