அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்..!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கவில்லை. தமிழ்நாட்டில் வழக்கமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான வகுப்புகள் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இதுவரை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படாமல் இருந்தது.
கடந்த 19-ந் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணியைத் தொடங்க மாநில அரசு தீவிரம் காட்டியது. இதன்படி, கல்லூரி கல்வி இயக்கம் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை(இன்று) முதல் தொடங்கப்படும் என்று நேற்று அறிவித்தது.
இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கான இந்த விண்ணப்ப பதிவு ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 48ம், பதிவுக் கட்டணமாக ரூபாய் 2ம் என்று மொத்தம் ரூபாய் 50 செலுத்த வேண்டும். இதில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் தேவையில்லை. பதிவு கட்டணமாக ரூபாய் 2 செலுத்தினால் போதுமானது. இந்த கட்டணத்தை விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையம் மூலமாக செலுத்தினால் போதும். அவ்வாறு செலுத்த முடியாத மாணவர்கள் தங்களுக்கான உதவி மையங்கள் மூலமாக the director, directorate of collegiate education, Chennai- 6 என்ற பெயரில் இன்றைய தேதி அல்லது அதற்கு பிந்தைய தேதிகளில் பெற்ற வங்கி வரைவோலையாகவோ அல்லது நேரடியாக செலுத்தலாம்.
மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் மாணவர்கள் மேற்கண்ட இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 044-28260098, 044-28271911 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் பெரிதளவு ஆர்வம் காட்டவில்லை. இதனால், மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் மிகுந்த ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக, ஆங்கில பட்டப்படிப்பு மற்றும் கணித படிப்புகளில் மாணவர் சேர்க்கை மற்ற பாடங்களை காட்டிலும் அதிகளவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.