Secondary Teachers: பேச்சுவார்த்தை தோல்வி: இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம்- திட்டமிட்டபடி காலவரையற்ற உண்ணாவிரதம்
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், திட்டமிட்டபடி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், திட்டமிட்டபடி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. அதே ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5,200 வரையே அடிப்படைஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைத்து வழங்கப்படுகிறது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம்
இதை அடுத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும் அவர்களின் கோரிக்கையை திமுக, அதிமுக அரசுகள் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் அளிக்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி வந்தனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு இடைநிலை பதிவு மூப்பு சங்க ஆசிரியர்கள் சென்னை பேராசிரியர் அன்பழகன் (டிபிஐ) வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டு, ஊதிய வேறுபாட்டை களையக்கோரி
கோஷங்கள் எழுப்பினர். இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க மூன்று நபர் குழு அமைத்து, அறிக்கையின் முடிவில், ஊதிய முரண்பாடு களையப்படும் எனவும் அரசு அறிவித்த நிலையில், 6 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
14 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறோம்
எனினும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி, செப்டம்பர் 28ஆம் தேதி சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் அறிவித்தது. இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களிடம் பேசும்போது, ’’கடந்த 2009-க்குப் பிறகு நியமனம் செய்யப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, அவர்களோடு பணியாற்றுகின்ற சக ஆசிரியர்களைப் போலவே அடிப்படை ஊதிய உயர்வை வழங்க வேண்டும். மற்ற இடைநிலை ஆசிரியர்களைப் போல ஊதியம் வழங்காமல்,
14 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறோம்.
இதனால் கடந்த அதிமுக ஆட்சி காலங்களில் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தோம். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் கலந்துகொண்டு, திமுக ஆட்சி அமைந்ததும் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என வாக்குறுதி கொடுத்தார். அதேபோல் திமுக தேர்தல்
அறிக்கையில் 311-ல் வாக்குறுதியும் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் எங்களுடைய ஊதிய முரண்பாடு கலைக்கப்படவில்லை. கடந்த ஆண்டு போராட்டம் நடத்திய பிறகு, 9 மாதங்கள் ஆகியும் இன்று வரை எங்களது ஊதிய முரண்பாடு களையப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
பேச்சுவார்த்தை தோல்வி
இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி செப்டம்பர் 28 முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர். இதை அடுத்து இன்று (25.09.2023) தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் தொடக்கக் கல்வி இயக்குனர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து இடைநிலை பதிவு மூப்பு சங்கத்தின் பொருளாளர் கண்ணன், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.