AI: ’’பெரியவங்க பேச்சை கேட்காதீங்க" - இளைஞர்களுக்கு OpenAI சிஇஓ அறிவுரையால் சர்ச்சை!
"இளைஞர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, வயதானவர்களின் பேச்சைக் கேட்பதுதான்"- இளைஞர்களுக்கு OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் அறிவுரை.
OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், டெல்லி ஐஐடிக்கு வருகை தந்தபோது, செயற்கை நுண்ணறிவு யுகத்தில் இளைஞர்கள் தங்களை எப்படித் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பேசினார்.
அப்போது, "இளைஞர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, வயதானவர்களின் பேச்சைக் கேட்பதுதான்" என்று அவர் கூறியது பலரை ஆச்சரியப்படுத்தியது. எதிர்காலத் தொழில்நுட்ப மாற்றங்களை கணிப்பதில் பழைய தலைமுறையை விட, இளைஞர்களே சிறந்தவர்கள் என்றும், பாரம்பரியமான வேலைவாய்ப்பு ஆலோசனைகள் இனி வரும் காலத்தில் எடுபடாது என்றும் அவர் தெரிவித்தார். எனவே, இளைஞர்கள் தங்கள் உள்ளுணர்வை நம்பி, மாற்றங்களுக்கு ஏற்ப வேகமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி
செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவின் பங்கு குறித்துப் பேசிய அவர், ’’இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய சந்தையாகத் திகழ்கிறது. இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆர்வம் மற்றும் திறமையை பாராட்டுகிறேன்’’ என்றார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது குறித்துப் பேசிய ஆல்ட்மேன், AI தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தி, சாமானிய மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கான மோடியின் தொலைநோக்குப் பார்வையும், அதேசமயம் அதன் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர் காட்டும் அக்கறையும் தன்னை கவர்ந்ததாகத் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு பறிபோகுமா?
AI-ஆல் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் குறித்துப் பேசிய அவர், "சில வேலைகள் நிச்சயம் இல்லாமல் போகும், ஆனால் இன்று கற்பனை செய்ய முடியாத புதிய வகை வேலைகள் உருவாகும்," என்றார். வெறும் அச்சமோ அல்லது அதிக உற்சாகமோ இல்லாமல், மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்தியர்கள் பொதுவாக பாதுகாப்பான சூழலை விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், தோல்விக்கு அஞ்சாமல் துணிச்சலான முயற்சிகளை (Risk) மேற்கொள்ளுமாறு இந்திய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
























