Engineering Fees: பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு? வெளியான அதிர்ச்சித் தகவல்
Engineering Colleges Fees Hike: அமலுக்கு வரும் புதிய கட்டண விகிதம், அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
பொறியியல், துணை மருத்துவம், கல்வியியல், சட்டக் கல்லூரி கட்டணங்கள் நடப்பாண்டில் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் 25 சதவீதம் வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பம் அளித்துள்ளன. இதனால் பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணை மருத்துவப் படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்காக கட்டண விகிதமும் மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மாற்றப்படும் புதிய கட்டண உயர்வு விரைவில் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமலுக்கு வரும் புதிய கட்டண விகிதம், அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு
உயர் கல்வி படிப்புகள் குறிப்பாக, பொறியியல், மருத்துவம், துணை மருத்துவம், கலை மற்றும் அறிவியல், கல்வியியல் ஆகிய படிப்புகளுக்குக் கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசு ஒரு குழு அமைத்தது. இந்த குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் செயல்பட்டு வருகிறார். இந்தக் குழு 3 வகையான படிப்புகளுக்கு புதிய கட்டண விகிதத்தை நிர்ணயம் செய்வதற்காக, விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
அதேபோல பி.இ., பி.டெக். ஆகிய பொறியியல் படிப்புகளுக்கும் நர்சிங், பார்மஸி, ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கும் (இளநிலை, முதுகலை) பி.ஏ., பி.எட். ஆகிய கல்வியியல் படிப்புகளுக்கும் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களிடம் இருந்து, கட்டண உயர்வு குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பொறியியல் படிப்புகளை நடத்தி வரும் தனியார் கல்லூரிகள் 20 முதல் 25 சதவீத கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
தற்போதைய கட்டணம் எவ்வளவு?
தனியார் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.50 ஆயிரம் எனவும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் ரூ.85 ஆயிரமாகவும் உள்ளன. இதையடுத்து கட்டண விகிதம் மாற்றப்படும் என்று தெரிகிறது.
புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அமலுக்கு வந்தால், அது 3 ஆண்டுகளுக்கு, அதாவது 2026- 27ஆம் கல்வி ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.