உஷார்.. 2ஆவது பொதுத்தேர்வுக்கு இந்த மாணவர்களுக்கு அனுமதி இல்லை; சிபிஎஸ்இ அறிவிப்பு
3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எழுதாமல் ஆப்செண்ட் ஆன மாணவர்களுக்கு, சிபிஎஸ்இ இரண்டாம் பொதுத் தேர்வுக்கு அனுமதி இல்லை என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), கட்டாய முதல் பொதுத் தேர்வில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் ஆப்சென்ட் ஆகும் மாணவர்களை இரண்டாவது பொதுத் தேர்வுக்கு அனுமதிக்காது என்று அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதத் தேர்வில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கான தேர்வுகளை எழுதாமல் ஆப்செண்ட் ஆகும் மாணவர்களுக்கு இரண்டாவது பொதுத் தேர்வு முயற்சியில் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்தும் வாய்ப்பு கிடைக்காது என்று வாரியம் அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளை இரண்டு சுழற்சிகளிலும் பிரித்து எழுத சிபிஎஸ்இ அனுமதிக்காது.
தேர்வு தேதிகள் என்ன?
- முதல் பொதுத் தேர்வு: பிப்ரவரி 17, 2026 அன்று வழக்கமான பொதுத்தேர்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இரண்டாவது பொதுத் தேர்வு: மே மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் விருப்பமான இரண்டாவது வாரிய தேர்வில் பங்கேற்க மாட்டார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.
சுமார் 26 லட்சம் மாணவர்கள், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதற்கு இரண்டு பொதுத் தேர்வுகள்?
சிபிஎஸ் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த உள்ளது. தங்கள் முதல் முறை பொதுத் தேர்வுகளை தவறவிட்ட அல்லது தோல்வியுற்ற மாணவர்களுக்கு உதவ, இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்று பொதுத்தேர்வு மாணவர்களின் கல்வி ஆண்டைக் காப்பாற்றவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். இது தவிர, தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்த விரும்பும் மாணவர்களும் இரண்டாவது வாரிய தேர்வில் பங்கேற்கலாம். மாணவர்கள் 'Essential Repeat' அல்லது 'Compartment' பிரிவின் கீழ் இரண்டாவது பொதுத் தேர்வுகளில் பங்கேற்க முடியும்.
தேர்வு முடிவுகள் எப்போது?
- முதல் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 2026-ல்அறிவிக்கப்படும்.
- இரண்டாவது தேர்வு முடிவுகள் ஜூன் 2026-க்குள் வெளியாகும்.
11 ஆம் வகுப்பில் சேர்வதற்கு முதல் தேர்வு மதிப்பெண்களை மாணவர்கள் பயன்படுத்தலாம். DigiLocker இல் முதல் தேர்வின் செயல்திறன் 11 ஆம் வகுப்பில் தற்காலிக சேர்க்கைக்கு கிடைக்கும். இருப்பினும், தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் தேர்ச்சி ஆவணங்கள் இரண்டாவது தேர்வுக்குப் பிறகே வழங்கப்படும்.
விளையாட்டுத் துறையில் பதிவு செய்துள்ள மாணவர்கள் முதல் தேர்வில் பங்கேற்க முடியாவிட்டால், இரண்டாவது தேர்வுகளில் பங்கேற்கலாம் என்றும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















