Guest lecturer Protest: கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கமா?- உயர் கல்வித்துறை செயலர் விளக்கம்
கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து உயர் கல்வித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
பணி நிரந்தரம் கோரிப் போராடும் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து உயர் கல்வித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 163 அரசு கலை கல்லூரிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக 5,583 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் அவர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2006ஆம் ஆண்டு வாக்கில் பணியமர்த்தப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று 2010ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி உறுதி அளித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கும் நோக்குடன், 2021 பிப்ரவரி 15,16,17,18 ஆகிய நாட்களில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதற்காக அரசாணை எண் 56 பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அது தடைபட்டது.
திமுக தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகும் கூட கவுரவ விரிவுரையாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவர் என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் அது செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே பல்வேறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டதாகவும் டிஸ்மிஸ் ஆகும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பதில், தகுதியுடைய வேறு நபர்களை கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கவும் கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் கவுரவ விரிவுரையாளர்களைப் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய அரசு உத்தரவிடவில்லை என்று உயர் கல்வித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, ''4,000 புதிய உதவிப் பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், அதில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுவோருக்கு 15% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : "திருக்குறளை தீர்த்துக்கட்டவே தமிழ்நாடு வந்திருக்கிறார் போல ஆளுநர்" - முரசொலி கடும் விமர்சனம்
மேலும் படிக்க : "மழை மேம்... லீவு விட்டா கோயில் கட்றேன் என் மனசுல" - புதுக்கோட்டை ஆட்சியரிடம் இன்ஸ்டாவில் கெஞ்சிய மாணவர்கள்..!
TN Rain Alert: இன்னும் 5 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கப் போகுது கனமழை...! குடையோடு வெளியில போங்க..!