"திருக்குறளை தீர்த்துக்கட்டவே தமிழ்நாடு வந்திருக்கிறார் போல ஆளுநர்" - முரசொலி கடும் விமர்சனம்
திருக்குறளை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டிற்கு ஆளுநர் வந்திருக்கிறார் என்று முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்குறள் பற்றி பேசிய கருத்தால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, அவரது பேச்சை கண்டித்து ஆளுங்கட்சியான தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் தலையங்கத்தில் எழுதியுள்ளனர்.
முரசொலி தலையங்கத்தில் எழுதியிருப்பதாவது, “ திருக்குறளை தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார் போல ஆளுநர். தினந்தோறும் திருக்குறளை வம்புக்கு இழுத்துக் கொண்டிருக்கிறார். ஜி.யு.போப் தவறான பொருள் எழுதிவிட்டார் என்று புதிய கண்டுபிடிப்பை சில மாதங்களுக்கு முன்பு செய்தார். கோடிக்கணக்கான மக்கள் பல்லாண்டு காலமாக திருக்குறளை தமிழில்தான் படிக்கிறார்கள் தவிர, போப்பின் மொழிபெயர்ப்பில் அல்ல என்பதை கூட அவர் அறியவில்லை.
தமிழில் எழுதப்பட்ட திருக்குறள் தமிழில்தான் தமிழர்களால் படிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் அல்ல என்பதை அவருக்கு யாராவது முதலில் சொல்ல வேண்டும். ஆன்மீகத்தின் ஆதாரமாக விளங்கும் திருக்குறள் வெறும் வாழ்க்கை நெறி நூலாக மட்டும் காட்சிப்படுத்தப்படுகிறது என்று வருத்தப்பட்டுள்ளார். அரசியலுக்காக உண்மையைச் சொல்ல சிலர் மறுக்கின்றனர் என்றும் சொல்லி இருக்கிறார்.
அந்த சிலர் யார்..? நாம்தான். அரசியலுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? திருக்குறள் என்ன தேர்தல் அறிக்கையா..? அதனை அரசியலுக்காக மாற்றிச் சொல்வதற்கு..? உலகப்பொதுமறையை உள்ளத்தால் ஒழுகி ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் என்பதே நமது நோக்கம். கள்ளத்தால் யாரும் களவாடி விடக்கூடாது என்பதே நமது நோக்கம்.
திருக்குறளுக்கு தவறான பொருள் உரைத்து ஆரிய சக்திகள் அழிக்க நினைத்தபோது, குறளாசானின் உண்மை மனதை உலகுக்கு உணர்த்த முற்பட்டது திராவிட இயக்கம். 1940ம் ஆண்டுகளில் பெரியார் நடத்திய குறள் மாநாடுகளுக்கு அதுவே அடிப்படை. உங்கள் மதம் குறள் மதம். உங்கள் நெறி குறள் நெறி என்று சொல்லுங்கள் என்றார் பெரியார். ஆரியப் பித்தலாட்டங்களுக்கு சரியான மருந்து. சரியான மறுப்பு திருக்குறள்தான் என்றார் பெரியார்.
குறளோவியம் தீட்டினார் தீந்தமிழ் கலைஞர். தலைநகர் சென்னையில் வள்ளுவப் பேராசானுக்கு கோட்டம் கண்டார் கலைஞர். கடல் நகராம் குமரியில் 133 அடி உயரச்சிலை அமைத்தார் தமிழ்ச்சிற்பி கலைஞர். நோக்கும் இடமெல்லாம் குறள் தீட்டி மக்கள் மனதில் ஈரடியை எழுதக்காரணம கலைஞர்.
தி.மு.க. என்பது தமிழ் முன்னேற்ற கழகமாக செயல்பட்ட காரணத்தால்தான் குறளும், தமிழும் இன்றைக்கு தலைநிமிர்ந்து நிற்கிறது. இல்லாவிட்டால் 1938 முதல் 1965 வரை தமிழ்நாட்டில் அடித்த ஆரிய இந்திச்சுனாமிகளால் குறளும், தமிழும் காணாமல் போயிருக்கும். அதனை காத்ததுதான் திராவிட அரசியல். இன்றைக்கு இவர்களுக்கு திருக்குறள் பாசம் பொங்குவதற்கு காரணம் குறளின் புகழொளிதான்.
வள்ளுவர் புதிதாக எதையும் சொல்லவில்லை. ஆரிய சரக்கைத்தான் தமிழ்ப்படுத்தினார் என்று சொல்லி இந்த புகழொளியை மட்டுப்படுத்தாதீர்கள். ஆரிய நெறி வேறு. குறள் நெறி வேறு என்பதை தமிழர்கள் உணர்ந்த காரணத்தால், இப்போது திருக்குறளை கெடுக்கப்பார்க்கிறார்கள்.
ஆன்மீக குறள் என்று குரல் எழுப்ப காரணம், அதை ஆரியக்குறளாக மாற்றுவதற்கே. கீதை சொல்லும் அறம் வேறு. குறள் சொல்லும் அறம் வேறு. அர்த்தசாஸ்திரம் சொல்லும் அறம் வேறு. குறள் சொல்லும் பொருள் வேறு. வாத்சாயனரின் காம சாஸ்திரம் சொல்லும் இன்பம் வேறு. குறள் சொல்லும் இன்பம் வேறு.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய கோட்பாடு உலகில் இடம்பெற்றால்தான் வெள்ளையர், கறுப்பர், தீண்டத்தக்காதவர் என்ற மனித குலத்தினை பிரித்து ஆட்டிப்படைக்கும் தீமைகள் மறையும். எனவே, திருக்குறளை வெளிநாட்டவர் குறிப்புகளில் இருந்தல்லாமல் உள்நாட்டு தமிழர்களின் சொற்களின் வாயிலாக அறிந்து பேச ஆளுநர் முனைவாராக”
இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது,