Manickam Tagore: ”அலையே இல்லை, மூன்றாவது இடம் தான், எல்லாம் தெரிந்தும் நாடகம்” - மாணிக்கம் தாகூர் ஆவேசம்
Manickam Tagore: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு மூன்றாவது இடமே கிடைக்கும் என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

Manickam Tagore: அதிமுக - பாஜக கூட்டணியால் தமிழ்நாட்டில் பெரிய மாற்றம் ஏற்படுத்த முடியாது எனவும் மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார்.
மாணிக்கம் தாகூர் விமர்சனம்
மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உள்துறை அமைச்சர் அமீத் ஷா அவர்களுக்கு தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம்… ஆனால் internal சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் மேசையில்தான் இருக்கும் அல்லவா? ஒரு மாதிரி இணைத்துள்ளேன். அதனால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலை காத்திருக்காமல் ராஜ்யசபா தேர்தலை முன்கூட்டியே நடத்த அவசரம். காரணம் எளிது — இப்போது எப்படியாவது 2 ராஜ்யசபா சீட்களை எடுத்துக்கொள்ளலாம். தேர்தல் முடிந்த பிறகு ஒரு சீட்டுக்குக் கூட கணக்கு போட முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?
அலை எல்லாம் வராது - மாணிக்கம் தாகூர்
நயினார் நாகேந்திரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்தால் பெரிய அலை வருமாம் என்கிறார்கள்… ஆனால் 2026-ல் 20% வாக்கு கூட கடக்க முடியுமா என்பது தான் பெரிய கேள்வி! அதிமுக மூன்றாம் இடம் என்பது இப்போது ‘அதிர்ச்சி செய்தி’ அல்ல, மெதுவாக ‘அரசியல் உண்மை’ ஆகி கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்களை அரசியல் கணக்குப் புத்தகத்தில் கணக்கிட முடியாது. அவர்கள் முடிவு எடுத்துவிட்டால், எந்த அவசரத் திட்டங்களாலும் அதை மாற்ற முடியாது” என மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.
என்ன பிரச்னை..
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாக உள்ள நிலையில், மாநிலங்களவையில் காலியாக உள்ள 37 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 உறுப்பினர்களுக்கான இடங்களும் அடங்கும். சட்டமன்ற தேர்தல் தொடர்பான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதை தான் மாணிக்கம் தாகூர் தற்போது விமர்சித்துள்ளார். ஒருவேளை சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு ராஜ்யசபா தேர்தலை நடத்தினால், அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஒரு உறுப்பினர் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் தான், அவசர அவசரமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக சாடியுள்ளார். இதனை கண்ட திமுகவினர், ”உண்மையில் நீங்கள் யார் பக்கம் தான்? நல்லவரா கெட்டவரா? வழக்கமாக திமுவை தானே விமர்சிப்பீர்கள் என்ன திடீரென அதிமுக பக்கம் சென்றுவிட்டீர்கள்” என கிண்டலடித்து வருகின்றனர்.






















