2026 சட்டமன்ற தேர்தல்களில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
Congress: தெற்கை நம்பி தான் பிழைப்பே..! இருப்புக்காக போராடும் காங்கிரஸ் - 4 மாநிலங்கள், 4 தேர்தல், 4 ஆபத்துகள்
TN Election 2026 Congress: தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநில தேர்தல்களில் குறிப்பிட்ட வெற்றியை பதிவு செய்து, தேசிய அரசியலில் தனது இருப்பிடத்தை உறுதி செய்ய காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.

TN Election 2026 Congress: தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு நீடிப்பதாக கூறப்பட்டாலும், காங்கிரஸ் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
4 மாநில சட்டமன்ற தேர்தல்கள் - நம்பிக்கையில் ”கை”
நடப்பாண்டில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் வரும் ஏப்ரல்/மே மாத காலகட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இது 2026ம் ஆண்டை வெற்றியுடன் தொடங்க காங்கிரசுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற முழுமையான சட்டமன்ற தேர்தல்களான டெல்லி மற்றும் பீகார் ஆகிய இரண்டு இடங்களிலும் காங்கிரசுக்கு தோல்வியே மிஞ்சியது. எனவே தேசிய அரசியலில் தனக்கான இருப்பிடத்தை உறுதி செய்ய, 4 மாநில தேர்தலில் ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.
4 மாநிலங்கள் - காங்கிரசுக்கு ”கை” கொடுக்குமா?
1. நம்பிக்கை தந்த கேரளா
கடந்த 2025ம் ஆண்டின் இறுதியில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றியை தொடர்ந்து, மீண்டும் ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவிலான தேர்தலில், அக்கட்சி தலைமையிலான கூட்டணி 38 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
2. திமுகவின் பலத்தில் காங்கிரஸ்
ஆளுங்கட்சியான திமுக உடன் காங்கிரஸ் வலுவான கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியை வசப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் காங்கிரசுக்கும் கணிசமான தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, மாநிலத்தில் கால் பதிக்க முயலும் பாஜகவின் முயற்சிக்கு மீண்டும் முட்டுக்கட்டை போடப்படும் எனவும் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
3. அச்சுறுத்தும் மேற்குவங்கம்
மேற்குவங்கத்தில் மீண்டும் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. ஆனால், ஆளுங்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை சமாளிப்பது என்பது காங்கிரசுக்கு மிகப்பெரிய சவாலாக கருதப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட 91 தொகுதிகளிலும் தோல்வியுற்றதோடு, கட்சி வாக்குகளில் 9.32 சதவிகிதம் சரிவையும் கண்டது.
4. மோசமான தோல்வியை தவிர்க்க தீவிரம்
அசாமில் தற்போதைய சூழலில் காங்கிரசுக்கு வெற்றிக்கான வாய்ப்பு இல்லை எனவும், ஆனால் கடந்த தேர்தலில் அதன் கூட்டணி வென்ற 29 இடங்களை தக்கவைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் வல்லுநர்கள் கணிக்கின்றனர். அந்த தொகுதிகளை வென்று வலுவான அடித்தளத்தை கட்டமைத்தால் மட்டுமே, 2031 தேர்தலிலாவது பாஜகவை வீழ்த்த காங்கிரசுக்கு வாய்ப்புள்ளதாம்.
4 மாநிலங்கள்.. 4 விதமான பிரச்னைகள்..
1. கேரளா - உட்கட்சி பூசல்
உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தந்த உத்வேகத்துடன், 4 முறை எம்.பி., 5 முறை எம்.எல்.ஏவான சென்னிதலா காங்கிரசின் தேர்தல் பரப்புரை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இவர் பாஜகவிற்கு ஆதரவான கருத்துகளை கூறி கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் வேட்பாளர் என யாரும் இன்றி தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் அறிவித்து இருந்தாலும், மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு தலைவர்களிடையே அதிகார மோதல் நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2. தமிழ்நாடு - கூட்டணியில் குழப்பம்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரும் காங்கிரஸின் நடவடிக்கையால், திமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோரின் பேச்சு அறிவாலயத்தை எரிச்சலூட்ட செய்துள்ளதாம். அவர்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இருகட்சி இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டு தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுமுனையில் திமுகவின் கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மாநிலத்தில் பாஜகவை காட்டிலும் வலுவாகவே உள்ளது. மத அரசியல் போன்ற பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டில் வலுவாக காலூன்ற முடியாமல் பாஜக தடுமாறி வருகிறது.
3. அசாம் - தலைவர்களிடையே மோதல்
அசாமில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் புபேன் போரா மற்றும் அவரது இடத்திற்கு புதியதாக வந்துள்ள கவுரவ் கோகாய் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ராகுல் காந்தி உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாஜகவிற்கு செல்லும் முடிவை போரா கைவிட்டு இருந்தாலும், அது நிலையான முடிவாக இருக்குமா என நம்பமுடியவில்லை. ஒருவேளை தேர்தலுக்கு முன்னதாக அவர் கட்சியில் இருந்து விலகினால், அது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
4. மேற்குவங்கம் - ரேஸில் இல்லாத காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி அமைக்க முயன்று வரும் திரிணாமுல் காங்கிரசுக்கும், கடந்த தேர்தல் மூலம் மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவிற்கும் இடையே தான், இந்த தேர்தலில் நேரடி போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. அதோடு காங்கிரஸ் போட்டியிலேயே இல்லை எனவும் உள்ளூர் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்
ஒற்றுமையே வலிமை.. காங்கிரஸ் உணருமா?
கடந்த 2024ம் ஆண்டு ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த கட்சியின் குமாரி செல்ஜா மற்றும் பூபேந்திர சிங் ஹுடா இடையே நிலவிய மோதல் வெற்றியை பாஜகவிற்கு பரிசளித்தது. சத்தீஸ்கரிலும் பூபேஷ் பாகல் மற்றும் டிஎஸ் சிங் தியோ இடையேயான மோதலால் காங்கிரஸ் தோல்வியை கண்டது. ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் இடையேயான மோதலும், காங்கிரசின் உட்கட்சி மோதலுக்கு மற்றொரு சாட்சியாகும்.
எனவே, 2026ம் ஆண்டின் முதல் பாதியில் நடைபெற உள்ல தேர்தலில் காங்கிரஸ் குறைந்தபட்சம் இரண்டு மாநிலங்களிலாவது வலுவான வெற்றியை பதிவு செய்ய, உட்கட்சி மோதலை தணித்து, கூட்டணி கட்சிகளுடன் சுமூகமான உறவை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
Frequently Asked Questions
2026 சட்டமன்ற தேர்தல்களில் எந்தெந்த மாநிலங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது?
கேரளாவில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
கடந்த உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, கேரளாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் உள்ளது.
தமிழ்நாட்டில் திமுகவுடனான காங்கிரஸின் கூட்டணி நிலை என்ன?
தமிழ்நாட்டில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இருப்பினும், தொகுதிப் பங்கீடு குறித்த கருத்து வேறுபாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
மேற்குவங்கத்தில் காங்கிரசின் நிலை என்ன?
மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவை சமாளிப்பது காங்கிரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
தேசிய அரசியலில் காங்கிரசுக்கு 2026 தேர்தல்கள் ஏன் முக்கியம்?
கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு, தேசிய அரசியலில் தனது நிலையை உறுதிப்படுத்த காங்கிரசுக்கு 4 மாநில தேர்தல்களில் குறைந்தது ஒரு மாநிலத்திலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம்.
























