Crime: மயிலாடுதுறையில் பெட்ரோல் குண்டு வீச்சு - இருவர் கைது
மயிலாடுதுறையில் முன் விரோதம் காரணமாக வீட்டின் முன்பு நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் 3 பேரில் இருவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா சித்தர்காடு அண்ணா நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு குமரேசன், முத்துக்குமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். முருகன் சென்னையில் சுதை வேலை பார்த்து வருகிறார். வீட்டில் ராதிகா, குமரேசன், முத்துக்குமார் ஆகியோர் மட்டும் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலையை முடித்துவிட்டு குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு தூங்கி உள்ளனர். மீண்டும் காலையில் கோலம் போடுவதற்காக அவரது தாயார் வீட்டு வாசலில் கதவை திறந்து பார்த்தபோது பாட்டில்கள் சிதறி சுவர்கள் கருமையாகவும் அருகில் உள்ள செடி எரிந்தும் காணப்பட்டுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் குடும்பத்தினரிடம் தெரிவிக்க அவர்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை செய்ததில், பீர் பாட்டிலில் பெட்ரோல் கலந்து வீசி வெடிக்க வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார், காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை தொடர் மேற்கொண்டனர். மேலும் ஏதாவது முன் விரோதம் காரணமாக இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில், கடந்த 5 -ஆம் தேதி அதே பகுதி சோழியத்தெருவைச் சேர்ந்த 24 வயதான அஜீத்குமார் தனது நண்பர் நவீன்ராஜூடன் குத்தாலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது நேரிட்ட சாலை விபத்தில் நவீன்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, நவீன்ராஜ் தரப்பில் அவரது தாய்மாமன் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட நண்பர்கள் அஜீத்குமாரின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே, முத்துக்குமார் வீட்டில் அஜீத்குமார் உள்ளிட்ட 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
இதையடுத்து, சோழியத்தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் அஜீத்குமார், நீடூரைச் சேர்ந்த பிரவீன், நீடூரைச் சேர்ந்த ராஜன் மகன் வெங்டேஷ் என்கிற ராமன் ஆகியோரை காவல்துறையினர் தேடிவந்தனர். இதில், அஜீத்குமார், வெங்கடேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள பிரவீனை மயிலாடுதுறை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் பீர் பாட்டிலில் பெட்ரோல் கலந்து திரி வைத்து வீட்டின் கதவின் முன்பு வீசி வெடிக்க வைத்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.