Adipurush Box Office: நெகட்டிவ் விமர்சனம் இருக்கட்டும்.. 3 நாள்களில் ரூ.340 கோடின்னா சும்மாவா? ஷாக் கொடுக்கும் ஆதிபுருஷ்!
வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, 500 கோடிகளுக்கும் மேற்பட்ட செலவில் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
நெகட்டிவ் விமர்சனங்கள் தாண்டி ஆதிபுருஷ் திரைப்படம் மூன்று நாள்களில் 340 கோடிகள் வசூலை அள்ளியுள்ளது இந்தியத் திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
500 கோடிக்கும் மேல் பட்ஜெட்
நடிகர் பிரபாஸ் ராமராகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும், க்ரித்தி சனோன் சீதையாகவும், தேவதத் நாக் ஹனுமனாகவும் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் ஆதிபுருஷ். வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, 500 கோடிகளுக்கும் மேற்பட்ட செலவில் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியுள்ள இப்படம் அளவுக்கு சமீபத்தில் ட்ரோல்களை சந்தித்த படத்தை யாரும் பார்த்திருக்க முடியாது. இப்படத்தின் VFX காட்சிகள் தொடக்கி நடிகர்கள் தேர்வு வரை அனைத்தும் கேலிக்குள்ளாகி மீம் க்ரியேட்டர்களுக்கு கண்டெண்ட் கிடங்காகவே இப்படம் மாறியது.
இந்நிலையில், இவ்வளவு மோசமான விமர்சனங்களுக்கு மத்தியில் ஆதிபுருஷ் திரைப்படம் ப்ரீபுக்கிங் தொடங்கி மாஸ் காண்பித்து வருகிறது.
340 கோடி வசூல்
மேலும் ஆதிபுருஷ் திரைப்படம் தோல்வியைத் தழுவும் என பெருவாரியான இணையவாசிகள் எதிர்பார்த்த நிலையில், இப்படம் விமர்சனங்களுக்கு மாறாக முதல் நாள் தொடங்கி வசூலைக் குவித்து வருகிறது.
இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் முதல் மூன்று நாள்களில் உலகம் முழுவதும் 340 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான யுவி க்ரியேஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக தன் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.
முன்னதாக ஆதிபுருஷ் பட திரையரங்குகளில் பிரபாஸ் ரசிகர்கள் செய்த அலப்பறை கடும் விமர்சனங்களைப் பெற்றது. தெலங்கானா, சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள் திரையரங்கம் ஒன்றில்ஆதிபுருஷ் திரையிடப்பட்டபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்க கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
இதேபோல், திரையரங்குக்கு சென்று படம் பார்த்த ரசிகர் ஒருவர் ஆதிபுருஷ் படம் நன்றாக இல்லை என்று கூறியதால், பிரபாஸ் ரசிகர்கள் ரவுண்டு கட்டி அவரைத் தாக்கினர்.
இந்த சம்பவங்கள் இணையத்தில் கடும் விமர்சனங்களைப் பெற்றன. ஆதிபுருஷ் படத்துக்கு தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்களே எக்கச்சக்கமாக வரும் நிலையில், படம் எப்படி கோடிகளில் வசூலிக்கிறது எனப் புரியாமல் குழம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சர்ச்சையான வசனங்கள்
எனினும் தமிழ்நாட்டில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியான திரையரங்குகள் காற்று வாங்கியபடியே உள்ளன.
இதனிடையே ஆதிபுருஷ் படத்தின் சர்ச்சைக்குரிய வசனங்கள் கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஹனுமன் பேசும் சில வசனங்கள் தெய்வீகத்தன்மை இன்றியும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் இணை எழுத்தாளரான மனோஜ் முண்டஷிர் முன்னதாக மனம் நொந்து டிவிட்டரில் பெரும் பதிவு ஒன்று பகிர்ந்ததுடன், பொது மக்களை புண்படுத்தும் வசனங்களை திருத்த தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாரத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.