தீபாவளி விடுமுறைக்கு வந்த வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு! திருவாரூரில் சோகம்!
விளமல் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த டவேரா வாகனம் இவர்களின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதி உள்ளது.
தீபாவளி விடுமுறைக்கு வந்த வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் விற்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ஜெயராஜ் வயது 31. இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். தீபாவளி விடுமுறைக்காக ஜெயராஜ் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
திருவாரூர் நகரத்திற்குட்பட்ட மருதப்பாடியை சேர்ந்தவர் ஜெயராஜின் உறவினரான பிரகாஷ் வயது 38. இவர் திருவாரூரில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஜெயராஜின் தங்கை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உணவு எடுத்து செல்வதற்காக ஜெயராஜும் பிரகாசும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது விளமல் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த டவேரா வாகனம் இவர்களின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரகாஷிற்கு கால் முறிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள பொதுமக்கள் ஒன்று திரண்டதால் டவேரா வாகனத்தில் வந்த மூன்று நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கின்றனர்.
தகவலறிந்த திருவாரூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த ஜெயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்த வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் என்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களில் ஏற்படும் விபத்து என்பது வழக்கமான நாட்களை விட அதிகரித்து காணப்படுகிறது. பொதுவான காரணமாக கூறப்படுவதில் மிக முக்கியமானது மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுவது. திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் 5 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கும் தீபாவளி அன்று 3 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கும் மாவட்டம் முழுவதும் உள்ள 108 அரசு மது மதுபான கடைகளில் விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனது தங்கைக்க்கு பிறந்துள்ள குழந்தையை பார்ப்பதற்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்காக தனது உறவினரான பிரகாசை அழைத்துக் கொண்டு ஜெயராஜ் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது விமா என்கிற பகுதியில் எதிரே வந்த டவேரா வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கால் முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிய பிரகாசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பொதுமக்கள் விபத்து நடந்த இடத்தில் கூடியதால் தவிர வாகனத்தில் வந்த மூன்று நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் சமீப காலமாக கால்நடைகள் இரவு நேரங்களில் ரோட்டில் திரிவதாலும் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.